Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

ராஜீவ் காந்தி பெயர் நீக்கம்.. “தயான் சந்த் கேல் ரத்னா” என்று இனி விருது அழைக்கப்படும்.. மோடி அதிரடி

127320-1628239689

டெல்லி: விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனிமேல் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.

விளையாட்டு துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது கேல் ரத்னா விருது. இது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரையொட்டி, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என்று வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் அது, முன்னாள் ஹாக்கி ஜாம்பவான் வீரரான தயான் சந்த் பெயரில், தயான் சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் அழைக்கப்படும் என்று, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், அறிவித்திருக்கிறார்.

ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த்

இந்திய ஹாக்கி விளையாட்டு வீரரான தயான் சந்த், 1926 முதல் 1949 வரை 185 சர்வதேச ஆட்டங்களில் 570 கோல்கள் அடித்தார். இவர் பங்கேற்ற மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது என்பது சிறப்பம்சமாகும். தயான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29, இந்தியாவில் தேசிய விளையாட்டுத் தினமாகக் கொண்டாட்டப்பட்டு வருகிறது. தயான் சந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பல வருடங்களாக கோரிக்கை வலுத்து வருகிறது. கிரிக்கெட்டை தாண்டி மற்ற விளையாட்டுகளை சேர்ந்தவர்களுக்கு இது போன்ற பெரிய மரியாதை கிடைக்கவில்லை, அவருக்கு உரிய கவுரவம் தரப்படவில்லை என்று பேச்சுக்கள் உண்டு.

நரேந்திர மோடி அறிவிப்பு

ஆனால் தயான் சந்த் பெயரில் டெல்லியில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு அவருக்கு மரியாதை செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் தேசிய விளையாட்டாக இருப்பது ஹாக்கி. ஆனால் பல காலங்களாக போதிய முக்கியத்துவம் இல்லாமல் இருந்து வந்தது. இப்போது, அதற்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் இந்த முறை பல்வேறு முக்கிய பந்தயங்களில் வெற்றி பெற்றது. வெங்கல பதக்கத்தையும் வென்றது. 41 வருடங்களுக்கு பிறகு இது ஒரு பெரிய சாதனையாகும். எனவே ஹாக்கிக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் தான் இந்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. நரேந்திர மோடியே இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

கேல் ரத்னா விருது

விளையாட்டு துறையில் மிகவும் சிறப்பான முறையிலே செயல்படுபவர்களுக்கு கேல் ரத்னா விருது அளிக்கப்படுகிறது. குறிப்பாக தேசிய சாம்பியன் பட்டம் பெறுபவர்கள், காமன்வெல்த் போட்டி, உலக கோப்பை போட்டி, ஒலிம்பிக் போன்ற முக்கியமான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்திய விளையாட்டுத் துறைக்கு மிகச் சிறந்த முறையில் பங்களித்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதிருப்தி குரல்கள்

மிகவும் முக்கியமான ஒரு விருந்துக்கு தயான் சந்த் பெயரை சூட்டி அதன்மூலம் ஹாக்கி விளையாட்டு முக்கியத்துவத்தை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இந்திய ஆடவர் ஹாக்கி அணி, மகளிர் ஹாக்கி அணி இரண்டுக்குமே இந்த ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கு பெறுவதற்கும் கடந்த சில வருடங்களாகவும் ஒடிசா மாநில அரசுதான் உதவி செய்து வருகிறது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவிகளால் ஹாக்கி அணி இந்த உயரத்தை தொட்டுள்ளது. ஆனால், திடீரென மத்திய அரசு விருது பெயருக்கு ஹாக்கி வீரர் பெயரை சூட்டி, ஹாக்கி புகழை வளர்க்கப்போகிறேன் எனக் கூறுவது ஏற்புடையது இல்லை என்று அதிருப்தி குரல்களும் எழுந்து வருகின்றன.

பீட்டர் அல்போன்ஸ் கருத்து

இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அளித்துள்ள பேட்டியில், கூறியதாவது: உலகத்திலேயே மிக இளமையான பிரதமர் என்று அடையாளம் காணப்பட்டு உலகமெங்கிலும் இருக்கிற இளைஞர்களால் கவரப்பட்டவர் ராஜீவ் காந்தி. இந்திய இளைஞர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். ஒரு அற்புதமான காலகட்டத்தை உருவாக்கி, புதிய இந்தியாவிற்கு தகவல் தொழில்நுட்பத்தை, கம்ப்யூட்டரை, செல்போன் போன்ற நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தவர் ராஜீவ் காந்தி.

கல் மனது

தமிழ் மண்ணிலே அவர் பலியாகி இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் ஒரு அடையாள சின்னமாக உள்ளவர், ராஜீவ் காந்தி. இன்றுவரை அவர் பெயரில் நிறுவப்பட்ட ஒரு விருதின் பெயரை மாற்ற வேண்டும் என்று சொன்னால் எவ்வளவு கல்மனதோடு மத்திய அரசு இருக்கிறது என்பது மட்டுமல்ல.. இறந்துபோன மாபெரும் தலைவருக்கு செலுத்த வேண்டிய அடிப்படை மரியாதையை கூட செலுத்துவதற்கு இந்த அரசு தயாராக இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மக்களை திசை திருப்ப முயற்சி

பெயர்களை மாற்றி அதன் மூலமாக மக்களை திசை திருப்ப நினைத்தால், அவர்கள் எண்ணம் பலிக்காது. ராஜீவ் காந்தி பேரும் புகழும் இந்த மண்ணின் வரலாறு இருக்கின்ற வரை இருக்கும். அவருடைய பெயரை இந்த நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள். இந்த பெயர் மாற்றம் என்பது ஒரு சிறு பிள்ளைத்தனமான வேலை என்றுதான் நான் கூறுவேன். அதற்குமேல் அதைப்பற்றி பேச ஒன்றும் இல்லை. வரலாற்றை அழிக்க அழிக்க நினைத்து இப்படி பெயரை மாற்றுகிறார்கள். வரலாற்றில் இப்படிப்பட்ட தலைவர்களெல்லாம் இந்திய மண்ணிலே வாழ்ந்தார்கள் என்று மக்களுக்கு தெரியக் கூடாது என நினைக்கிறார்கள். ஜவகர்லால் நேரு வாழ்ந்தார், இந்திரா காந்தி வாழ்ந்தார், சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்ந்தார், மகாத்மா காந்தி வாழ்ந்தார் என்பதை மறைக்கப் பார்க்கிறார்கள்.

வரலாற்றை அழிக்க முயற்சி

புகழ்பெற்ற தலைவர்கள் பெயர்கள் விருதுகள் வழங்கப்படுவதன் நோக்கம், அந்த தலைவர்களைப் பற்றி தொடர்ந்து மக்கள் நினைக்க வேண்டும் என்பதும், இப்படிப்பட்ட தலைவர்கள் மக்களுக்கு செய்த நன்மைகளை நினைத்து பார்க்க வேண்டும் என்பதும்தான். வரலாற்றை அழித்து விடலாம் என்று நினைப்பவர்கள் கற்பனையில் தான் வாழ்கிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் பற்றி புரிந்து கொள்ளவில்லை. இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp