சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா விதிகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது.தமிழ்நாட்டில் தினசரி கொரோனா கேஸ்கள் குறைந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தினசரி கேஸ்கள் 5000க்கும் கீழ் தற்போது சென்றுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு மொத்தம் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட வகை 1, மாவட்ட வகை 2, மாவட்ட வகை 3 என்று மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மூன்றாவது வகையாகும்.
பேருந்துகள்
ஊரடங்கு தளர்வை முன்னிட்டு தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் மட்டும் பேருந்து போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் உள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்னும் கட்டுப்பாடுகள் உள்ளன.
கட்டுப்பாடு
இங்கு கேஸ்கள் குறைந்தாலும், ஆக்டிவ் கேஸ்கள் அதிகம் இருப்பதால் இன்னும் முழுமையாக தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மக்களிடையே பேருந்து போக்குவரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் இயக்கப்பட்ட பஸ்கள் மூலம் 22 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பல லட்சம் பேர் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றுள்ளனர்.
நிலைமை என்ன
இப்படி மக்கள் பலர் வெளியே பேருந்துகளில் அதிக அளவில் சுற்றுவதால் கொரோனா கேஸ்கள் 17 மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா கேஸ்கள் குறைந்து வந்த நிலையில் தற்போது யூ டர்ன் அடித்து கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.தருமபுரி , திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 17 மாவட்டங்களில் கேஸ்கள் உயர்ந்து உள்ளது.
கேஸ்கள்
இந்த மாவட்டங்களில் நேற்று முதல் நாளை விட நேற்று அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 30-40 கேஸ்கள் சராசரியாக ஒரே நாளில் உயர்ந்து உள்ளது. இந்த மாவட்டங்களில் சில வற்றில் பேருந்து பயணம் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் கூட கேஸ்கள் உயர்ந்து உள்ளது. மற்ற தளர்வுகள் காரணம் மக்கள் வெளியே வந்தது, பல அலட்சியமாக வெளியே சுற்றுவதும் கூட கேஸ்கள் உயர காரணமாக இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
முக்கியம்
இப்படியே போனால் இது மூன்றாம் அலைக்கு காரணமாக அமைந்துவிடும். அதே சமயம் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் பெரிய தளர்வுகள் இல்லை. இங்கு பேருந்து போக்குவரத்தும் இல்லை., இதனால் இந்த மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் உயரவில்லை. மாறாக இங்கு தொடர்ந்து கேஸ்கள் குறைந்து வருகிறது.
மூன்றாம்
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் நாளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை வல்லுநர்கள், மருத்துவருடன் ஆலோசனை நடத்த உள்ளார். தளர்வுகளை குறைக்கலாமா, அல்லது மேலும் தளர்வுகளை கொண்டு வரலாமா, கேஸ்கள் உயர்வதை எப்படி தடுப்பது என்று ஆலோசிக்க உள்ளனர்.