சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்ல செல்ல திட்மிட்டுள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் தமிழகத்தின் அனுமதியின்றி அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சிக்கிறது. ஆனால் ஒப்பந்தங்களின் படி தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவிரியில் எந்த அணையையும் கர்நாடகா கட்டக் கூடாது.
இதனை சுட்டிக்காட்டி அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் கர்நாடகாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. அத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டசபையில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டமும் நடைபெற்றது.
டெல்லியில் அனைத்து கட்சி குழு
இந்த கூட்டத்தில் கர்நாடகாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது; மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் இந்த தீர்மானங்களுடன் தமிழக அனைத்து கட்சி தலைவர்கள் குழு டெல்லி சென்றுள்ளது. மத்திய அமைச்சர் செகாவத்திடம் இந்த தீர்மானங்கள் வழங்கப்பட்டும் உள்ளன.
டெல்லி போகும் எடியூரப்பா
இந்நிலையில் தமிழகத்தின் அதிரடிக்கு எதிராக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, கர்நாடகா அனைத்து கட்சிக் குழுவுடன் டெல்லி செல்ல இருக்கிறார். மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று எடியூரப்பா தலைமையிலான அனைத்து கட்சி குழு வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளது.
எடியூரப்பாவுக்கு பதிலடி
இதற்கு பதிலடி தரும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை மறுநாள் டெல்லி செல்ல உள்ளதாகத் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக அனைத்து கட்சிக் குழுவினரை அழைத்து பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதியுடனும் சந்திப்பு
மேலும் டெல்லி பயணத்தின் போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.