Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

‘மின்னல் வேகம், வேக்சினுக்கும் பலனில்லை..’ வல்லரசுகளை திணறடிக்கும் டெல்டா கொரோனா.. ஆபத்தானது ஏன்?

vaccine87146-1629788565

வாஷிங்டன்: இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வகைகளில் டெல்டா கொரோனா தான் மின்னல் வேகத்தில் பரவுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வேக்சின் போட்டுக் கொண்டவர்கள் மத்தியிலும் டெல்டா கொரோனா வேகமாகப் பரவுவதால் அது பற்றிய ஆய்வுகளும் உலகெங்கும் நடைபெற்று வருகிறது.

சீனாவில் கடந்த 2019இல் கொரோனா வைரஸ் பரவித் தொடங்கியது முதல், அது தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா போன்ற பல்வேறு நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இருப்பினும், அவை அனைத்தையும்விட இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா தான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மின்னல் வேகத்தில் பரவும் இந்த டெல்டா கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்ட ஆல்பா வகையைவிட 40% வரை வேகமாகப் பரவுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மின்னல் வேகம்

அதேபோல வேக்சினின் தடுப்பாற்றலும் டெல்டா கொரோனாவுக்கு எதிராகக் கணிசமாகக் குறைவது பல்வேறு ஆய்வுகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி 2 டோஸ் வேக்சின் எடுத்தவர்கள் மத்தியிலும் டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளில் டெல்டா கொரோனா தான் மிக வேகமாகப் பரவுவதாகக் குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், பல்வேறு நாடுகளிலும் டெல்டா கொரோனா தான் ஆதிக்கம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். டெல்டா கொரோனா குறித்து அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், இது மெர்ஸ், சார்ஸ், எபோலா, சளி, பெரியம்மை ஆகியவற்றைவிட வேகமாகப் பரவுவதாகத் தெரிவித்துள்ளது.

அமினோ ஆசிட்

டெல்டா கொரோனா ஏன் இப்படி மின்னல் வேகத்தில் பரவுகிறது என்பதைக் கண்டறிய உலகெங்கும் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. டெல்டா கொரோனா வைரசில் உள்ள ஒரு வகை அமினோ ஆசிட் காரணமாகவே, அது இந்தளவுக்கு வேகமாகப் பரவுவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மனித செல்களில் கொரோனா வைரசால் எளிதாகத் தாக்க முடிகிறது. ஆல்பா கொரோனா வகைகளிலும் இதே போன்ற மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. இருப்பினும், இதில் வேறு வகையான அமினோ ஆசிட் உள்ளது.

P681R பிறழ்வு

இதனை கொரோனா P681R பிறழ்வு என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த P681R பிறழ்வு காரணமாக ஸ்பைக் புரதத்தால் ஆல்பாவை விட டெல்டா கொரோனா துகள்களால் மனித செல்களை எளிதாகத் தாக்க முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். இதனால் தான் ஆல்பா கொரோனா வகையைக் காட்டிலும் டெல்டா வகை வேகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த P681R பிறழ்வை நீக்கிய போது டெல்டா கொரோனா பரவும் வேகம் குறைந்துவிட்டது. இதனால் டெல்டா வேகமாகப் பரவு இந்த P681R பிறழ்வு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அது மட்டும் காரணமில்லை

ஆனால், இதை சில ஆய்வாளர்கள் மறுத்தும் உள்ளனர். உகாண்டா நாட்டில் முன்பு கண்டறியப்பட்ட சில உருமாறிய கொரோனா வகைகளில் இந்த P681R பிறழ்வு இருந்துள்ளது. ஆனால் அது இந்த டெல்டா கொரோனாவைப் போல வேகமாகப் பரவவில்லை. இந்தியாவில் கண்டறியப்பட்ட மற்றொரு கொரோனா வகையான காப்பா வகையிலும் இந்த P681R பிறழ்வு இருக்கிறது. ஆனால், இது டெல்டா கொரோனா போல வேகமாகப் பரவவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். டெல்டா கொரோனாவில் உள்ள L452R மற்றும் D6146 மாற்றங்கள், மனித செல்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்த உதவுகிறது. டெல்டா கொரோனாவிலேயே பல்வேறு மாற்றங்கள் உள்ளதால், இந்த ஒரு காரணத்தால் தான் அது வேகமாகப் பரவுகிறது என ஆய்வாளர்களால் குறிப்பிட்டு ஒரு காரணத்தைச் சொல்ல முடியவில்லை

நாசியில் வைரஸ்

சீனாவில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் முக்கியமான ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். டெல்டா கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்படும்போதும், அவரது உடலில் 5 நாட்களுக்குப் பின்னரே அறிகுறிகள் தென்படத் தொடங்குகிறது. ஆனால், அவரது நாசி உள்ளிட்ட பகுதிகளில் 2ஆம் நாளிலிருந்தே வைரஸ் அதிகரிக்கத் தொடங்குகிறது. அதாவது ஒருவர் தனக்கு கொரோனா இருக்கிறது என்பதை உணரும் முன்னரே, அவர் மற்றவருக்குப் பரப்பத் தொடங்குகிறார். ஒரு நபர் எத்தனை பேருக்கு கொரோனாவை பரப்புகிறார் என்பது R Factor என்று அழைக்கப்படும். சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவின் R Factor 2 முதல் 4 வரை இருந்த நிலையில் டெல்டா கொரோனாவின் R Factor 6.4ஆக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

வேக்சின் தடுப்பாற்றல்

டெல்டா கொரோனாவுக்கு எதிராக வேக்சின் தடுப்பாற்றல் குறைவது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா கொரோனாவுக்கு எதிராக ஆஸ்ட்ரா ஜெனிகா வேக்சின் தடுப்பாற்றல் 64% ஆகக் குறைகிறது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா எதிராக 90 வரை பாதுகாப்பை அளித்த பைசர் வேக்சின், டெல்டா கொரோனாவுக்கு எதிராக 64% வரை மட்டுமே பாதுகாப்பைத் தருகிறது. இவை மட்டுமின்றி மாடர்னா, ஸ்புட்னிக் வி, ஜான்சன் என அனைத்து வகையான வேக்சின் தடுப்பாற்றலும் டெல்டா கொரோனாவுக்கு எதிராகக் கணிசமாகக் குறைகிறது. மேலும் பைசர் வேக்சின் தடுப்பாற்றல், 90 நாட்களில் குறையத் தொடங்குகிறது.

என்ன வழி

மேலும் 2 டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்டவர்களுக்குத் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதில்லை என்றாலும் அவர்களது நாசி பகுதியில் அதிகளவில் டெல்டா கொரோனா இருக்கிறது. அதாவது அவர்கள் டெல்டா கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றாலும்கூட, வேக்சின் போட்டுக் கொண்ட பின்னரும் அவர்கள் மூலம் டெல்டா கொரோனா பரவுகிறது. எனவே, ஒரு நாட்டிலுள்ள அனைவரும் வேக்சின் போட்டுக் கொள்ளும் வரை டெல்டா கொரோனா பாதிப்பைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை ஆய்வாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp