சென்னை: கோழி, ஆடுகள் வெட்டலாம்.. ஆனால், மாடுகளை பண்ண கூடாது என்று ஒரு தாசில்தார் கறிக்கடைக்காரரை மிரட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மாட்டிறைச்சி தொடர்பான ஒரு விவகாரம் நம்ம ஊரிலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கறிகடைக்கடை ஓனரை, மாட்டு கறி வெட்டக்கூடாது என்று ஒரு தாசில்தார் மிரட்டி இருக்கிறார்.. இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
என்ன நடந்தது?
தாசில்தார் சுப்பிரமணி, கறிக்கடைக்காரரிடம் பேசும்போது, “ஆடு, கோழிகளை பண்ணலாம்.. ஆனால் மாடுகளை பண்ண கூடாது.. உங்களுக்கு மட்டும் சொல்லல.. இந்த ஏரியாவுக்கே சொல்றேன்.. புரியுதா” என்கிறார். அதற்கு அந்த கடைக்காரர், “மாட்டுக்கறி விற்பனை செய்யக் கூடாது என்ற அரசு எதுவும் இப்படி உத்தரவு போட்டிருக்கா? இந்த ஏரியாவில் 100 கடைகள் இருக்கு.. அங்கெல்லாம் போய் சொல்லுங்க.. எனக்கு மட்டும் ஏன் வந்து சொல்றீங்க?” என்று ஆதங்கத்துடன் கேட்கிறார்.
அவிநாசி
“தெரியாம பேசக்கூடாது.. ஒரு தாசில்தார் வந்து இவ்ளோ தூரம் சொல்றேன்னா எதுவும் தெரியாம பேசக்கூடாது.. எதுக்கு வந்து இதை சொல்றேன்? இந்த ஊரில் மாடுகள் வதை செய்யப்படுவதாக நிறைய கம்ப்ளைண்ட் வந்திருக்கு.. அதனால நான் வந்திருக்கேன்.. அவிநாசியில்தான் நிறைய மாடுகள் வெட்டப்படுதாம்” என்கிறார்.
உறுதி
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானதால், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உறுதி தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.. அதேசமயம், இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் ட்வீட் போட்டு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
உத்தரபிரதேசம்
அவிநாசி என்ன உத்திரப்பிரதேசத்தில் இருக்கிறதா? அங்கென்ன பாஜக ஆட்சி நடக்கிறதா? உடனடியாக இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவும் என்ற கோரிக்கைகள் அரசுக்கு பதிவாகி கொண்டிருக்கின்றன. நம் தமிழ்நாட்டில் மாட்டு கறி சாப்பிட எந்த தடையும் இல்லை.. அதை அறுத்து விற்பனை செய்யவும் எந்த தடையும் இல்லை.. ஆனால், தாசில்தார் ஒருவரே, இப்படி கறிக்கடைக்காரை மிரட்டியதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது..
மாடுகள்
வடமாநிலங்களில் பாஜக ஆட்சியில் பசு பாதுபாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் அராஜகத்தில் தொடர்ந்து ஈடுட்டு வருகின்றனர். மாடுகளை வாங்கி செல்லும் வியாபாரிகளை வழிமறித்து, இறைச்சிக்காக மாடுகளை கடத்துவதாக சொல்லி அவர்களை தாக்கி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில், அதுவும் திமுக ஆட்சி நடத்தி வரும் இந்த சூழலில் மாட்டுக் கறி வெட்டக் கூடாது என்று ஒரு தாசில்தாரே நேரில் வந்து சொல்லியிருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.