Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

மங்கி கேப் கொள்ளையன் கைது: நகை மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்

Photo-2
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் கடந்த மாதம் 23ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வழிப்பறி கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்- ஆசனூர் சாலையில், செட்டித்தாங்கள் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சத்யா என்ற பெண்ணை, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சத்யா அணிந்திருந்த 9 கிராம் தங்க சங்கிலியை பரித்து சென்றுள்ளார். பின்னர், இதுகுறித்து சத்யா அருகிலிருந்த நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் இருந்த போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில், திருக்கோவிலூர் ஆய்வாளர் உடனடியாக ஒலிபெருக்கி மூலம் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து குற்றவாளியை பிடிக்க தயார் படுத்தி உள்ளார். இந்நிலையில், மர்ம நபர் ரிஷிவந்தியம் அருகே செல்லும் போது அங்கு மறைந்திருந்த போலீசார் குற்றவாளியை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், குற்றவாளியோ போலீசாரை கண்டதும் வாகனத்தை திருப்பி தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர், திருக்கோவிலூர் காவல் நிலையத்தில், சத்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கங்காதரன் மேற்பார்வையில், திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாபு, உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன், குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டியன், குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் வீரப்பன், நரசிம்மஜோதி உள்ளிட்ட 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர். இருபத்தி ஆறு நாட்கள் தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் மர்ம நபர் விழுப்புரத்திலிருந்து பல்சர் 200 இருசக்கர வாகனத்தில் வருவதும், விழுப்புரத்தில் இருந்து முகையூர் வரை முகமுடி அணியாமலும், திருக்கோவிலூர் அருகே வரும்போது மங்கி கேப் அணிந்து இருசக்கர வாகனத்தில் முன் பக்கம் மட்டுமே பதிவு எண் வைத்துக்கொண்டும் சுற்றி வருகிறான் என்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து சம்பவம் நடந்த இடம் அதனை சுற்றியுள்ள இடம் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். இதனை அடுத்து தொடர்ச்சியாக குற்றப்பிரிவு போலீசார் இதுபோன்று தனி மனிதனாக மங்கி கேப் அணிந்து கொண்டு வந்து செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்கள் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையின் போது குறிப்பிட்ட அந்த மர்ம நபர் பாண்டிச்சேரியை அடுத்த தனத்துமேடு பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் விஜி வயது 24 என்பது, தற்சமயம் விழுப்புரம் ராமைய்யா நகர் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. பின்னர், மேலும் அவர் குறித்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசாரின் விசாரணையில், குறிப்பிட்ட அந்த நபர் திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு, வேலூர், திருச்சி மாவட்டம் சமயபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இதே போன்று இருசக்கர வாகனத்தில் மங்கி கேப் அணிந்து சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில், செஞ்சியில் தனது காதலியை கொலை செய்த வழக்கில் விசாரணை கைதியாக அவப்போது விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி வருவதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து நேற்று 18ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்திற்கு சென்று விட்டு வெளியே வரும்போது போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் குறிப்பிட்ட அந்த தேதியில் தான் செயின் பரிப்பில் ஈடுபட்டதும் ஒப்புக்கொண்டுள்ளார். மேற்கொண்ட விசாரணையில் தொடர்ச்சியாக குற்றச்செயல்களில் ஈடுபடும் போது எந்த பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட போகிறோமோ, அந்த பகுதிக்கு செல்லும்போது மங்கி கேப் அணிந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளதாகவும், அதேபோல் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டு விட்டால் வாகனதின் நிறத்தையும், பதிவு எண்ணையும் மாற்றி விடுவதை வழக்கமாகவும் கொண்டுள்ளதாக தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அவனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 21 கிராம் தங்க சங்கிலியும், 9 கிராம் உருகிய நிலையில் உள்ள தங்கத்தையும் மேலும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் போது பாதுகாப்பிற்காக வைத்திருந்த கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர். அதோடு தான் பயன்படுத்திய இருசக்கர வாகனம் திருடப்பட்ட வாகனம் என்பதையும் தனிப்படை போலீசாரின் விசாரணையில் குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளார். சுமார் 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருசக்கர வாகனம் ஆகியவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளியை கைது செய்தனர். தொடர்ச்சியாக இருபத்தி ஆறு நாட்கள் மேற்கொண்ட விசாரணையில் 30 இடங்களில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இறுதியாக குற்றவாளியை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp