கொரோனா மன்றாம் அலை தொடங்கும் அபாயம் உள்ளதாக மருத்துவ வள்ளுனர்களால் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், நீட் தேர்வை ஒத்திவைக்கும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பாவர் பதில் அளித்துள்ளார்.
நீட் தேர்வு
எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அந்த வகையில், நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு (NEET) வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
எதிர்க்கும் தமிழகம்
மத்திய அரசின் தினிப்பாகக் கருதப்படும் நீட் போன்ற தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதிதாக முதலமைச்சர் பதிவி ஏற்றுள்ள திமுக அரசு நிச்சயம் நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறிதி விடுத்துள்ளதோடு, தொடர்ந்து மத்திய அரசிடம் இதுகுறித்து வலியுறுத்தியும் வருகிறது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர்
இந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் சார்பில்திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், விழுப்புரம் எம்பி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி
நாடாளுமன்றத்தில் தென்சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், கொரோனா 3-ம் அலை அச்சம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நீட் தேர்வு மற்றும் பிற நுழைவுத் தேர்வுகளை நிறுத்திவைக்க ஒன்றிய அரசுக்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா? என்ற வினாவை முன்வைத்தார்.
நீட் தேர்வு
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பாவர், ஏற்கனவே அறிவித்துள்ளதைப் போல திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதிகளில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் நடைபெறும். கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுவதோடு, மாணவர்கள் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேலும் சில நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் என்றார்.
மாணவர்களின் பாதுகாப்பு
மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முககவசம், சானிடைசர் உள்ளிட்டவை உள்ளடக்கிய பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும். தேர்வு நிலையங்களுக்கு வெளியே கூட்டம் கூடாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இதன் மூலம் நீட் தேர்வு ஒத்தி வைப்பு, நிறுத்தி வைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அவர் விளக்கியிருக்கிறார்.
அட்மிட் கார்டில் இ பாஸ்
இணை அமைச்சர் பாரதி ப்ரவின் பவார் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக தனிமனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடித்துத் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்வு நடைபெறும் நகரங்களும் மையங்களும் அதிகப்படுத்தப்படும். நீட் அட்மிட் கார்டில் இ பாஸ் இணைக்கப்படும்.
தனி ஆய்வகத்தில் தேர்வு
தேர்வு எழுத அனுமதிக்கப்படும் முன், அனைத்து மாணவர்களின் உடல் வெப்பமும் பரிசோதிக்கப்படும். வெப்பநிலை அதிகமாக உள்ள மாணவர்கள் தனி ஆய்வகத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கலை, அறிவியல் நுழைவுத் தேர்வு
அதனைத் தொடர்ந்து, மீண்டும் கேள்வியெழுப்பிய தமிழச்சி தங்கபாண்டியன், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசுக்கு ஏதேனும் திட்டம் உள்ளதா? அப்படி இருந்தால், அவற்றின் விவரங்களை தெரியப்படுத்த வேண்டும் என கூறினார். இதற்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த முடிவுகள் அந்தந்த பல்கலைக்கழகங்கள், மாநில அரசுகளிடம் உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.