சென்னை: நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவது என தெரியாமல் திமுகவின் சீனியர்கள் வழக்கறிஞர்கள் தவியாய் தவிக்கின்றனர். அதேநேரத்தில் நீட் தேர்வு ரத்து என்பதை நடைமுறைப்படுத்தியாக வேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டுவதாக கோட்டை தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. திமுகவின் தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும் நீட் தேர்வு ரத்து என்பது பிரதான அம்சமாக இடம்பெற்றது.இதனால் திமுக ஆட்சிக்கு வந்தது முதலே நீட் தேர்வு ரத்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அண்மையில் டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்தி இருந்தார்.
நீதிபதி ராஜன் குழு
இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வின் பாதிப்பை அறிவதற்காக நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குழு ஒன்றை அறிவித்தார். இந்த குழுவும் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்களிடம் கருத்துகளை வாங்கி உள்ளது. இக்குழுவின் பரிந்துரை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுக்கப்பட இருக்கிறது.
ராஜன் குழுவுக்கு எதிராக வழக்கு
இதனிடையே நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் கரு நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது. நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அமைப்பதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் அனுமதிப் பெறப்பட்டதா ? என்று சரமாரியான கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி தலைமையிலான முதல் பெஞ்ச் எழுப்பியிருக்கிறது.
விசாரணை ஒத்திவைப்பு
இதற்கு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உடனே பதில் தரமுடியவில்லை. தமிழக அரசிடம் கேட்டு பதில் தருவதாகத் தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை ஜூலை 5-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
இந்த நிலையில், அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகம் சுந்தரம் உள்பட சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முதல் கட்ட ஆலோசனையில் நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு என்ன விளக்கம் தருவது என வழக்கறிஞர்களுக்கு தெரியவில்லை. இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்று அப்டெச் ஆனாராம்.
அறிக்கை கேட்கும் ஸ்டாலின்
சட்டத்தில் உள்ள எந்த ஓட்டைகளை பயன்படுத்தினாலும் நேரடியாக பதில் கிடைக்கவில்லை. இதனால் நீட் தேர்வு குறித்து முந்தைய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், மத்திய அரசு சொல்லியுள்ள பதில்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து , நீதிமன்றத்துக்கு என்னமாதிரியான விளக்கம் தரலாம் என ஒரு ரிப்போர்ட் தயாரித்துக் கொடுங்கள் என்று சட்ட வல்லுநர்களை கேட்டுக் கொண்டாராம் ஸ்டாலின்.
ராஜன் குழுவின் கருத்து
அத்துடன் மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்ற சட்ட முன்வடிவே, நிரந்தமராக நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்கு போதுமானது என நீதிபதி ஏ.கே. ராஜன் தொடர்ந்து பொதுக் கூட்டங்களில் வலியுறுத்தி வந்தார். அதனால் நீதிபதி ஏ.கே. ராஜனுடனும் கலந்து ஆலோசிக்குமாறும் சட்ட வல்லுநர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார் என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.