லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடுரோட்டில் கார் டிரைவரை பெண் ஒருவர் கடுமையாக தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லக்னோவில் ஆவாத் வரிகுதிரை கிராஸிங்கில் பெண் ஒருவர் கார் டிரைவரை கடுமையாக தாக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நின்றன.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த வீடியோவில் அந்த பெண் தன்னை அந்த நபர் ஓட்டி வந்த கார் இடித்தததாக அதில் சப்தமிட்டு பேசுகிறார்.
போக்குவரத்து காவலர்
ஆவாத் வரிகுதிரை கிராஸிங்கில் நடந்த இந்த சம்பவம் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை அங்கிருந்த போக்குவரத்து காவலர் தடுக்கிறார். ஆனால் அந்த பெண் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் அந்த டிரைவரை அடித்தபடியே இருக்கிறார்.
செல்போனை தூக்கி வீசி
மேலும் அந்த டிரைவரின் செல்போனை தூக்கி வீசி உடைத்தார். இந்த வீடியோ அங்கு இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவரால் எடுக்கப்பட்டது. பெண் போலீஸை கூப்பிடுங்கள் என அந்த டிரைவர் அங்கிருந்தவர்களிடம் கெஞ்சுகிறார்.
காப்பாற்றுமாறு கேட்ட டிரைவர்
அப்போது அங்கிருந்த வேறு ஒருவர் வந்து கார் டிரைவரை காப்பாற்ற முயல்கிறார். அந்த பெண் அவரை அடிக்காத மாதிரி அவர் காப்பாற்றுகிறார், எனினும் அந்த பெண் அடிக்கிறார். அந்த பெண்ணிடம் ஏன் இவரை அடிக்கிறீர்கள் என கேட்டதற்கு. அவரது கார் என் மீது இடித்து விட்டது என்கிறார் அந்த பெண்.
டிரைவரின் சுயமரியாதை
நட்ட நடு ரோட்டில் அத்தனை பேர் பார்க்க டிரைவரின் சுயமரியாதையை கேள்விக்குறியாக்கும் வகையில் இந்த பெண் செய்த செயலால் அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காரில் இடித்திருந்தால் போலீஸில் புகார் அளிக்காமல் சட்டத்தை அந்த பெண்ணே கையில் எடுத்துக் கொள்வதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பெண்ணை கைது செய்ய கோரிக்கை
போக்குவரத்து போலீஸார் தடுத்தும் அந்த பெண் அடிக்கிறார் என்றால் என்ன தைரியத்தில் இப்படி செய்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அந்த பெண்ணை கைது செய்யுமாறு கோரிக்கைகள் வலுத்துள்ளன. டிவிட்டரிலும் #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது.