சென்னை: சின்ன கலைவாணர் மற்றும் ஜனங்களின் கலைஞன் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17 ம் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
தனது நகைச்சுவையால் மக்களை சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்த நடிகர் விவேக்கின் திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.
கொரோனாவை தடுக்கும் ஒரே பேராயுதமான தடுப்பூசி குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நடிகர் விவேக், மரணம் அடைவதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு அந்த புகைப்படத்தையும் வெளியிட்டு மக்களிடம் விழுப்புணர்வு ஏற்படுத்தினார். தடுப்பூசி போட்டதால்தான் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார் என்று செய்திகள் வேகமாக பரவியது.
ஆனால் இந்த செய்திகள் எல்லாம் தவறானது என்று கூறிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நடிகர் விவேக்கின் மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்றும் தடுப்பூசி தொடர்பாக வதந்தி பரப்ப கூடாது என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சுகாதார நிபுணர்களும் இந்த கருத்தையே கூறினார்கள்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால்தான் நடிகர் விவேக் மரணமடைந்துள்ளார். அவரது இறப்பில் மர்மம் இருக்கிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.