சென்னை: வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி வழக்கில் அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் என்ற சொகுசு காரை இங்கிலாந்திலிருந்து வாங்கினார். இந்த காருக்கு நுழைவு வரியாக ரூ 1.6 கோடி நிர்ணயித்த நிலையில் அதை செலுத்தினால்தான் காரை பதிவு செய்வோம் என ஆர்டிஓ அலுவலகம் தெரிவித்துவிட்டது.
இதையடுத்து அந்த காருக்கு செலுத்த வேண்டிய நுழைவு வரி உள்பட அனைத்து வரிகளையும் செலுத்திய விஜய், நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்றம்
இந்த நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார்.
மேல்முறையீடு
மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி
அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் விலக்கு கோரியதாகவும், இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மதிப்புக் கூட்டப்பட்ட வரி செலுத்தாமல் காரை கொண்டு செல்லவே நுழைவு வரி விதிக்கப்படுகிறது என்பதாலும் விலக்கு கேட்டதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அபராதம் ரத்து
இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டில் மேலும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
விசாரணை
தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல், இந்த மேல்முறையீட்டு மனுவை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரியும் விஜய் தரப்பில் கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வேறு அமர்வுக்கு மாற்றிய நீதிபதிகள்
அப்போது நீதிபதிகள், விஜய் மேல்முறையீட்டு மனுவை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர்.