டெல்லி: இந்திய பிரதமர் இந்த நாட்டை பெரும் தொழிலதிபர்களுக்கு விற்பனை செய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். 60 சதவீதம் மக்களின் குரல் நசுக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் ஆவேசமாக தெரிவித்தார்.
இதேபோல, ராஜ்யசபாவில் விவாதிக்க விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தாக்கப்பட்டதை பார்க்கும்போது பாகிஸ்தான் எல்லையில் நின்று கொண்டிருந்ததை போல உணர்ந்ததாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார். பெகாசஸ், விவசாயச் சட்டங்கள் மற்றும் ராஜ்யசபாவில் தங்கள் எம்.பி.க்களை மோசமாக கையாண்டது உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று பேரணி நடத்தினர்.
எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
முன்னதாக, பல எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை சந்தித்தனர், பின்னர் பாராளுமன்ற மாளிகையிலிருந்து விஜய் சவுக் வரை பேரணியாக சென்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் போராட்டத்தில் ராகுல் காந்தி, சரத் பவார், மல்லிகார்ஜுன கார்கே, சஞ்சய் ராவத், திருச்சி சிவா, மனோஜ் ஜா மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பதாகைகள்
அவர்கள் ராஜ்யசபா தலைவர் எம் வெங்கையா நாயுடுவை சந்தித்து சில பெண் எம்பிக்கள், மார்ஷல் பாதுகாப்பு வீரர்களால் மோசமாக கையாளப்பட்டு தள்ளி விடப்பட்டதாக புகார் அளித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் ‘ஜனநாயக படுகொலையை நிறுத்து’ மற்றும் ‘விவசாயிகள் விரோதச் சட்டத்தை ரத்து செய்யக் கோருகிறோம்’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
ஜனநாயக படுகொலை
ராகுல்காந்தி பேசுகையில், பாராளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும் இது “ஜனநாயகத்தின் படுகொலை” என்றும் கூறினார். விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் எழுப்பிய போதிலும் நாடாளுமன்றத்திற்குள் பேச அனுமதிக்கப்படவில்லை. பெரிய வணிகர்களுக்கு நாட்டை விற்று விட்டார்கள்.
ராகுல் காந்தி ஆவேசம்
ராஜ்யசபாவில் முதல்முறையாக எம்.பி.க்கள் தாக்கப்பட்டுள்ளனர். வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து தாக்கப்பட்டனர். சபையை நடத்துவது தலைவர் மற்றும் சபாநாயகரின் பொறுப்பு. நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், இந்திய பிரதமர் இந்த நாட்டை விற்கும் வேலையைச் செய்கிறார். அவர் இந்தியாவின் ஆன்மாவை இரண்டு மூன்று தொழிலதிபர்களுக்கு விற்கிறார், அதனால் தான் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
பாகிஸ்தான் பார்டர்
சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் பேசுகையில், பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்படாததால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் பலனளிக்கவில்லை. ராஜ்யசபாவில் மார்ஷல்களாக வேறு நபர்களை அழைத்து வந்த விதத்தை பார்த்தால், நான் பாகிஸ்தான் எல்லையில் நிற்பது போல் உணர்ந்தேன் என்றார்.
வரலாறு காணாத ஒடுக்குமுறை
திமுக எம்.பி, திருச்சி சிவா பேசுகையில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பாராளுமன்றத்தில் இதுபோன்று ஒரு நாளும் நடந்தது கிடையாது என்று குற்றம்சாட்டினார். என்.சி.பி.யின் பிரபுல் படேல் தனது தலைவர் ஷரத் பவார் தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற அவமானகரமான சம்பவங்களை பாராளுமன்றத்தில் பார்த்ததில்லை என்று தெரிவித்ததாக குற்றம்சாட்டினார்.