சென்னை: திமுகவுடன் கை கோர்க்க தேமுதிக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.. இது சம்பந்தமாக விரைவில் விஜயகாந்த் தன்னுடைய தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக சார்பில் முதல்வர் ஸ்டாலினை சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது விஜயகாந்தின் உடல்நிலை பற்றி கேட்டறிந்த ஸ்டாலின் நேரில் வந்து அவரை சந்திப்பதாக சொல்லி இருந்தனர்.. அதற்கேற்றபடி, சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்தை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
நிவாரண உதவி
அப்போது தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண உதவியை விஜயகாந்த் வழங்கினார். எதற்கான சந்திப்பு இது என்று தெரியாவிட்டாலும், எப்படியும் இவர்கள் கூட்டணி வைப்பார்களோ என்று கணக்கு போடப்பட்டது.. காரணம், துரைமுருகனும் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றிருந்ததுதான்..
பரபரப்பு
விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது.. வடமாவட்டங்களில் இந்த முறை பிரதான ஓட்டு வங்கியுடன் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில், தேமுதிகவையும் கூட்டணிக்குள் இழுத்து போடும் முயற்சியில் திமுக இறங்கி வருவதாக அப்போதே பரபரக்கப்பட்டது. அதற்கேற்றபடி முதல்வர் ஸ்டாலின், துரைமுருகனுடன் விஜயகாந்த் வீட்டுக்கு சென்றிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது. இந்த சந்திப்புக்கு பிறகு, திமுகவுடன் கூட்டணி வைக்க பிரேமலதாவும், சுதீஷூம் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
பாமக
குறிப்பாக, “நமது எதிரியான பாமகவுக்கும் துரோகியான அதிமுகவுக்கும் பாடம் புகட்ட திமுக கூட்டணியில் எப்படியும் இணைந்து விட வேண்டும் என்றும், கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டால் உள்ளாட்சி தேர்தலில் 5 சதவீத இடங்களையாவது பெற வேண்டும் என்றும், கூட்டணியை உறுதி செய்ய ஸ்டாலினின் மனைவி துர்காவிடம் தொடர்ச்சியாக பேசுங்கள்” என்றும் பிரேமலதாவை சுதீஷ் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
வாய்ப்பு
அதுமட்டுமல்ல, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி உறுதியானால் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கவலைப்பட தேவையில்லை என்பதால், கூட்டணி விஷயத்தில் நடத்திய அணுகுமுறையை திமுகவிடம் காட்டக்கூடாது என்றும் சுதீஷ் அலர்ட் செய்துள்ளார் போலும்.. ஸ்டாலினும், விஜயகாந்த்தும் சந்தித்து பேசியதன் விளைவு, திமுக – தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு இடையே சுமூகமான உறவு ஏற்பட்டுள்ளதாம்.. 2 கட்சிகளுக்கும் இடையே இணக்கமான சூழலும் இப்போதே நிலவ தொடங்கி உள்ளதாம்.. இதையடுத்து நடக்க போகும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வைக்க 100 சதம் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வட தமிழகம்
ஆனாலும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க திமுகவில் சில நிர்வாகிகள் விரும்பவில்லை.. குறிப்பாக வடதமிழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் இதை பற்றி சொல்லும்போது, “விஜயகாந்த் மீது தலைவர் தளபதிக்கு உள்ள நட்பும் மரியாதையும் அவருக்கு அப்படியே இருக்கட்டும்… தப்பில்லை… அதுக்காக தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால், திமுகவின் வெற்றி எங்களால்தான் நடந்தது என தேர்தல் முடிந்ததும் அந்தம்மாவும் அவரது தம்பியும் வீராவேசம் காட்டுவார்கள். அந்த நிலை நமக்கு வேண்டுமா?
அரை சதவீதம்
இத்தனைக்கும் அரை சதவீத வாக்குகளைதான் அவர்கள் வைத்திருக்கிறார்கள்… அதனால், தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான விவாதம் வருகிறபோது அதனை ஆமோதிக்காதீர்கள்.. நாம தனித்து நின்றாலே அபார வெற்றி பெற்றுவிடுவோம்” என்று துரைமுருகனிடம் சந்தித்து வலியுறுத்தவும் செய்தனர்.
விஜயகாந்த்
கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே திமுக கூட்டணி அமைக்க வேண்டும் என்றுதான் பல நிர்வாகிகள் விரும்பினார்கள்.. அதை ஓபனாகவே விஜயகாந்திடம் எடுத்தும் சொன்னார்கள்.. ஆனாலும், கடைசி நேரத்தில் கூட்டணிக்கான வாய்ப்பு ஏற்படாமல் போய் விட்டது.. அதை எப்படியும் இந்த உள்ளாட்சி தேர்தலில் சரிகட்டும் விதத்தில் தேமுதிகவின் செயல்பாடுகள் இருக்கும் என்கிறார்கள். இது தொடர்பாக விரைவில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நம்பிக்கை
இந்த உள்ளாட்சி தேர்தலில் பிரதிநிதித்துவம் கிடைத்தால் அதை வைத்து கட்சியை மேலும் பலப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கட்சியினரிடம் கூடி வருகிறது.. விரைவில் நடைபெற உள்ள தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பான கருத்துக்களை கட்சி தலைமையிடம் தெரிவிக்க பல நிர்வாகிகள் தயாராக இருக்கிறார்களாம்.. விஜயகாந்த்தின் வருகைக்காக மட்டுமே அவர்கள் வெயிட்டிங்..!