தென்காசி : தென்காசி அருகே காரில் வைத்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக, மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல, கரூரில் மருத்துவனையின் ஊழியரின் 11ம் வகுப்பு படிக்கும் மகளுக்கு மருத்துவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவமும் அரங்கேறியது.
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு வருது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பலபத்திரராமபுரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் முத்துசாமி (35). இவர் அதே ஊரில் பொக்லை மற்றும் டிராக்டரை வாடகைக்கு விடும் தொழிலை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று மாலை தனது திமுக கொடி கட்டிய காரில் சின்னக்கோவிலான்குளம் சென்று கொண்டிருந்த போது, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மாணவிக்கு அருகே காரை நிறுத்திய முத்துசாமி, பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடுகிறேன், எனக் கூறி மாணவிக்கு வலுக்கட்டாயமாக லிப்ட் கொடுத்துள்ளார். அப்போது முத்துசாமி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், காரை பேருந்து நிறுத்தம் பக்கம் ஓட்டிச் செல்லாமல், அருகே இருந்த காட்டுப் பகுதிக்கு திருப்பியுள்ளார். அங்கு காரை நிறுத்தி விட்டு,மாணவியிடம் சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, கத்தி கூச்சலிடவும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியை மீட்டனர்.
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று ஆளும் திமுக தலைமையிலான அரசிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், உங்களின் கட்சிக் காரர்களிடம் இருந்து பெண்களை காப்பாற்றுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் போல, என எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.