பிரதமர் தலைமையிலான மத்திய அரசின் ஒப்புதல் படி, மத்திய நிதியமைச்சகமும், நித்தி அயோக் அமைப்பும் இணைந்து நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியைத் திரட்ட அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பல்வேறு சொத்துக்களை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்காகத் தேசிய பணமாக்கல் திட்டம் எனப் புதிய கட்டமைப்பைத் திட்ட வடிவத்துடன் உருவாக்கி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வறிக்கையை வெளியிட்டார்.
தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் மத்திய அரசு அடுத்த 4 வருடத்தில் 2025ஆம் நிதியாண்டுக்குள் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான திட்டத்தைக் கையில் எடுக்க உள்ளது. இதில் தமிழ்நாட்டில் எந்தெந்த சொத்துக்களை மத்திய அரசு விற்பனை செய்யப்படுகிறது என்பதைப் பட்டியலிட்டுள்ளது.
சாலை திட்ட சொத்துக்கள்
மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தில் சுமார் 26,700 கிலோமீட்டர் அளவிலான சாலைகளைக் குத்தகைக்கு விட்டு அதன் மூலம் சுமார் 1,60,200 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதில் தென் இந்தியப் பகுதிகளில் மட்டும் சுமார் 28 சாலை திட்டங்கள் அடங்கிய 1,931 கிலோமீட்டர் சாலைகளைத் தனியாருக்குத் தற்காலிகமாக விற்பனை செய்யப்படுகிறது. மேற்கு பகுதியில் 2,031 கிலோமீட்டர் சாலைக் குத்தகைக்கு விடப்படுகிறது.
- 94 கிலோமீட்டர் கொண்ட உளுந்தூர்பேட்டை – பாடலூர் சாலை
- 73 கிலோமீட்டர் கொண்ட உளுந்தூர்பேட்டை – திண்டிவனம் சாலை
- 38 கிலோமீட்டர் கொண்ட திருச்சி – பாடலூர் சாலை
- 63 கிலோமீட்டர் கொண்ட கிருஷ்ணகிரி – தோப்பூர் காட் சாலை
- 60 கிலோமீட்டர் கொண்ட 6 வழி ஓசூர் – கிருஷ்ணகிரி சாலை
- 46.5 கிலோமீட்டர் கொண்ட தாம்பரம் – திண்டிவனம் சாலை
- 117 கிலோமீட்டர் கொண்ட திருச்சி – காரைக்குடி சாலை (திருச்சி பைபாஸ் உட்பட)
ரயில்வே துறை சொத்துக்கள்
மொத்த ரயில்வே சொத்துக்களில் சுமார் 26 சதவீதத்தைத் தனியாருக்குக் குத்தகைக்கு விட்டு சுமார் 1,52,496 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது மத்திய அரசு.
- ரயில்வே நிலையம் புதுப்பித்தல் பணிக்குப் புதுச்சேரி ரயில்வே நிலையம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
- பாசஞ்சர் ரயில் இயக்குவதில் தனியார் பங்கீட்டுக்குச் சென்னை கிளஸ்டர் ரயில்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
- மலை ரயில் பாதையைத் தனியாருக்குக் கொடுக்கும் திட்டத்தில் நீலகிரி ரயில் பாதை தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
மின்சாரம் உற்பத்தி சொத்துக்கள்
சுமார் 6.0 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்கும் தளத்தை இந்தியா முழுவதிலும் இருந்து விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் NLC அதாவது நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சில நீர் சக்தி ஆதாரங்களை விற்பனை செய்யப்பட உள்ளது. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் தமிழ்நாட்டில் இருந்தாலும் அது மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
விமான நிலையங்கள்
இந்தியாவில் தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் சுமார் 25 விமான நிலையங்கள் நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுச் சுமார் 20,782 கோடி ரூபாய் அளவிலான தொகையை நிதி திரட்ட உள்ளது. இத்திட்டத்தில் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, சென்னை ஆகிய 4 விமான நிலையத்தைச் சுமார் 4,694 கோடி ரூபாய் அளவிலான நிதி திரட்டப்பட உள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் திருச்சி விமானத்தைத் தனியாருக்குக் கைமாற்றப்பட உள்ளது.
துறைமுகச் சொத்துகள்
தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் 9 முக்கியமான துறைமுகத்தில் சுமார் 31 திட்டங்களைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் சுமார் 12,828 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. இதில் தூத்துக்குடி துறைமுகம் உள்ளது.
V. O. சிதம்பரனார் துறைமுகம் என அழைக்கப்படும் தூத்துக்குடி துறைமுகத்தின் 3 திட்டங்களை விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசு சாகர் மாலா திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.
V. O. சிதம்பரனார் துறைமுகத்தில் பெர்த் 1,2,3,4, மற்றும் 9, அதைத் தொடர்ந்து NCB-III ஆகியவற்றை 3 பிரிவுகளாக விற்பனை செய்யப்பட உள்ளது.
ஹோட்டல் சொத்துக்கள்
மத்திய அரசின் இந்தியா டூரிசம் டெவலப்மென்ட் கார்ப்ரேஷன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சில ஹோட்டல் சொத்துகளை இந்தத் தேசிய பணமாக்கல் திட்டத்தின் தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் புதுச்சேரியில் இருக்கும் ஹோட்டல் பாண்டிசேரி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
துறை வாரியான அறிவிப்பு
தேசிய பணமாக்கல் திட்டத்தின் படி எந்தத் துறையில் எவ்வளவு மதிப்பிலான சொத்துகளைப் பணமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதன் முழு விபரம்.
- சாலை – ரூ.1,60,200 கோடி
- ரயில்வே – ரூ.1,52,496 கோடி
- மின்சாரப் பரிமாற்றம் – ரூ.45,200 கோடி
- மின்சார உற்பத்தி – ரூ.39,832 கோடி
- இயற்கை எரிவாயு பைப்லைன் – ரூ.24,462 கோடி
- பிராடெக்ட் பைப்லைன் – ரூ.22,504 கோடி
- டெலிகாம் – ரூ.35,100 கோடி
- கிடங்கு – ரூ.28,900 கோடி
- சுரங்கம் – ரூ.28,747 கோடி
- விமானப் போக்குவரத்து – ரூ.20,782 கோடி
- துறைமுகம் – ரூ.12,828 கோடி
- ஸ்டேடியம் – ரூ.11,450 கோடி
- நகர ரியல் எஸ்டேட் – ரூ.15,000 கோடி
இதன் மூலம் தோராயமாகச் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட உள்ளது.
அரசு சொத்துக்கள் உரிமை
இந்தத் தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் பணமாக்கும் அனைத்து அரசு சொத்துக்களின் உரிமையும் நிரந்தரமாக அரசின் கையில் தான் இருக்கும், குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு அதாவது குத்தகை காலம் முடிந்த பின்பு இந்தச் சொத்துகள் திரும்பவும் அரசு கட்டுப்பாட்டிற்குக் கீழ் வரும்.
தனியார் பங்கீடும் முதலீடும்
இந்த இடைப்பட்ட காலத்தில் அரசு சொத்துகளில் தனியார் பங்கீடு இதில் அதிகரிக்கும், அதன் மூலம் தனியார் நிறுவனங்கள் வருமானம் பெற முடியும் என்றாலும் அரசு சொத்துக்கள் சிறப்பான முறையில் பயன்படுத்த முடியும்.
உள்கட்டமைப்புத் திட்டம்
இந்தச் சொத்து விற்பனையில் கிடைக்கும் வருமானத்தை அரசு நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டத்திற்குப் பயன்படுத்தும் எனத் தேசிய பணமாக்கல் திட்டம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
DIPAM விளக்கம்
சொத்து விற்பனை அதாவது asset monetisation என்பது அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்களில் பெரிய அளவில் பயன்படுத்தாமல் இருக்கும் அல்லது குறைவாகப் பயன்படுத்தும் சொத்துக்களைப் பணமாக்கி அதன் மூலம் அரசுக்கு வருமானத்தை ஈட்டும் வழியை உருவாக்குவது என மத்திய அரசின் முதலீட்டு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.