சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதா அல்லது கூடுதல் தளர்வுகளை வழங்குவதா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடியது. கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது நாள் ஒன்றுக்கு 35,000 பேர்வரை பாதிக்கப்பட்டனர். அதனையடுத்து, தமிழ்நாடு அரசு எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக கொரோனா பாதிப்பு
கடந்த மே மாதம் முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்தது. இதனால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் தியேட்டர்கள், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு 1500க்கும் கீழே குறைந்து வந்தது. இதன் காரணமாக கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகமே புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
கோவை, திருப்பூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடைகள் திறப்பதில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெரிய கோவில்களில் ஆடி அமாவாசை நாட்களில் மக்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றைய தினம் 1,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து ஒரே நாளில் 2,011 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 189 பேருக்கும், கோயம்புத்தூரில் 226 பேருக்கும், செங்கல்பட்டில் 114 பேருக்கும், ஈரோட்டில் 154 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து தற்போது வரை 20,117 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.
கொரோனா அச்சம் காரணமாக தற்போது வரையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகின்றது அதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.