சென்னை: 16-வது தமிழகச் சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று தொடங்கியது.
இக்கூட்டத்தில் தமிழக அரசு நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் வேளாண் துறைக்குத் தனிப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் தெரிவித்தார்.
தமிழக அரசு கொரோனா, நிதி நெருக்கடி எனப் பல இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் போராடி வரும் நிலையிலும் பட்ஜெட் தாக்கலில் புதிய மற்றும் முக்கியமான மாற்றத்தை முதல் ஆட்சி ஆண்டிலேயே செய்துள்ளது ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.
சாதித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்
திமுகக் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான ஒன்றாக விளங்கிய விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் அறிக்கை திட்டம் மூலம் தமிழ்நாட்டின் பல கோடி விவசாயிகள் பலன் பெறும் நிலையில், நேற்று வரையில் இந்தத் திட்டம் நடப்பு நிதியாண்டில் சாத்தியப்படுமா..? என்ற கேள்வி இருந்த நிலையில், தற்போது சாதித்துள்ளார் ஸ்டாலின்.
தமிழ்நாடு 2021-22 பட்ஜெட்
ஜூலை மாத இறுதிக்குள் தமிழ்நாடு அரசு 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டு உள்ள நிலையில், விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் அறிக்கை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விவசாயத் துறை பட்ஜெட்
இந்த விவசாயத் துறை பட்ஜெட் மூலம் தமிழ்நாட்டில் விவசாயத் துறையின் உற்பத்தி அதிகரிப்பதும், அவர்களின் வருமானத்தைப் பெருக்குவது, விவசாயிகளின் பாதுகாப்பு, வாழ்வியல், மேம்படுத்தல் ஆகியவை எளிதாகவும், முழுக் கவனத்துடன் செய்ய முடியும்.
முதல் மாநிலம் தமிழ்நாடு
இந்தியாவில் முதல் முறையாக விவசாயத் துறைக்குத் தனிப் பட்ஜெட் அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு-ஆக உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் விவசாயத் துறையைச் சார்ந்து உள்ளனர். இதன் மூலம் 50 சதவீத வேலைவாய்ப்பு, வர்த்தகம், நுகர்வோர் சந்தை ஆகியவை விவசாயத் துறையை நம்பியுள்ளது.