தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் முதல்முறையாக பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 19ம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சிகளே முன்னிலை பெற்று வருகிறது. அதிமுகவுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.
இப்படியிருக்கையில், தனித்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு நினைத்ததைப் போன்று பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இதுவரையில் 150க்கும் மேற்பட்ட பேரூராட்சி உறுப்பினர்களும், 40க்கும் மேற்பட்ட நகராட்சி உறுப்பினர்களும், சுமார் 5க்கும் மேற்பட்ட மாநகராட்சி உறுப்பினர்களும் பாஜக தரப்பில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதன்மூலம், திமுக, அதிமுகவை தொடர்ந்து அதிக இடங்களில் வென்ற 3வது கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றுள்ளது.
இதனிடையே, சென்னை மாநகராட்சி தேர்தலில் பாஜக முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது. பாஜக வெற்றி பெற்றதை விட, அதன் வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றதே தமிழகத்தில் இப்போது பேசுபொருளாகியுள்ளது. காரணம், இவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, கோட்சேவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, “கோட்சே காந்தியை சுட்டது அவரது நியாயம். அவர் ஒரு இந்து. அதனால்தான் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நான் கோட்சே ஆதரவாளர் என்பதில் பெருமைப்படுகிறேன்” என்று பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134 வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிட உமா ஆனந்தன் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. கோட்சேவுக்கு ஆதரவு தெரிவித்தவருக்கு சீட்டா, என அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், அதனைப் பொருட்படுத்தாமல், விமர்சனங்களை புறம் தள்ளி, மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார்.
இன்று தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் வேளையில், அவர் வெறும் 8 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார் என செய்திகள் வெளியாகின. அதை கொண்டாடும் வகையில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அது உண்மை இல்லை, வதந்தி என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தனக்கு எதிராக கிளம்பிய வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் 4,373 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுசீலா கோபாலகிருஷ்ணன் 2,886 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் அனுராதா 2,109 வாக்குகளும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம், முதன்முறையாக சென்னை மாநகராட்சிக்குள் பாஜக உறுப்பினர் அடியெடுத்து வைக்கிறார்.
ஏற்கனவே அதிக இடங்களில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் பாஜக கட்சியினருக்கு, உமா ஆனந்தனின் வெற்றி மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.