சென்னை: தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை மின் உற்பத்தி மையங்களை அமைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. இதற்காக டென்மார்க் நாட்டுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட உள்ளது.இந்தியாவிற்கான டென்மார்க் தூதுவர் ஃபெரிடி ஸ்வான் உடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்திப்பு நடத்தினார். அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர்.
தமிழ்நாட்டை ஒட்டி இருக்கும் வங்கக்கடல் பகுதியில் மிகப்பெரிய காற்றாலை மின்சார திட்டத்தை கொண்டு வரும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த ஆலோசனையின் முடிவில் கடலில் காற்றாலை அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
காரணம்
தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை வைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு அரசு டென்மார்க்கை அணுக முக்கிய காரணம் இருக்கிறது. உலகிலேயே சொந்த நாட்டு மின்சார உற்பத்தியில் காற்றாலை மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடு டென்மார்க்தான். 1970ல் இருந்து டென்மார்க் காற்றாலை உற்பத்தியில் நம்பர் 1 நாடாக உள்ளது.
தொழில்நுட்பம்
நவீன தொழில்நுட்பம், அதிக மின்சார உற்பத்தி என்று காற்றாலை உற்பத்தியில் டென்மார்க் பல புரட்சிகளை செய்துள்ளது. இதன் காரணமாகவே உலகில் பல வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டில் கடலில் காற்றாலை மின் உற்பத்தியை ஏற்படுத்தி டென்மார்க் நிறுவனங்களை அல்லது டென்மார்க் அரசை அணுகிறது. டென்மார்க்கின் மொத்த மின் தேவையில் 47% மின்சாரம் கடலில் அமைக்கப்பட்டு இருக்கும் காற்றாலை மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது.
வேகம்
இன்னும் பத்து வருடங்களில் டென்மார்க்கின் மொத்த மின் தேவையில் 85% வரை காற்றாலை மின்சாரம் மூலமே பூர்த்தி செய்யப்படும் என்கிறார்கள். கடலில், கடலுக்கு அருகே, நிலத்தில் என்று மூன்று வகையான காற்றாலை திட்டங்களை அந்த நாடு செயல்படுத்தி வருகிறது.
நிறுவனம்
இதற்காக அரசு மின் உற்பத்தி நிறுவனம், தனியார் நிறுவனங்கள், கோ ஆபரேட்டிவ் நிறுவனங்கள் பல இயங்கி வருகின்றன. முக்கியமாக டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் சிட்டி அருகே அதிக அளவில் வானுயர காற்றாலைகள் கடலில் அமைக்கப்பட்டுள்ளன. கீழே குறிப்பிடப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் டென்மார்க்கை சேர்ந்தவை. இதன் காரணமாகவே டென்மார்க்கை தமிழ்நாடு அரசு களமிறக்கி உள்ளது.
சிறப்பு
தமிழ்நாட்டில் காற்றாலை மின்சார உற்பத்தியை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டென்மார்க்கை அணுக இதுவே காரணம் ஆகும். காற்றாலை மின் உற்பத்தி மைய மார்க்கெட்டில், அதிலும் கடலில் மையங்களை அமைப்பதில் உலகிலேயே டென்மார்க்தான் தற்போது டாப். இதன் காரணமாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டென்மார்க்குடன் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளார்.