சென்னை: கொங்கு நாடு தனி மாநில பிரிவினை என்பது விஷமத்தான சிந்தனை; நாட்டுக்கு இது நல்லது அல்ல; தமிழகத்தின் அமைதியைப் பாதிக்கும் என்று பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க) அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சராக எல். முருகன் பதவியேற்ற போது மத்திய பா.ஜ.க. அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கொங்கு நாடு, தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் கொங்கு நாடு தனி மாநிலத்தை மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்கப் போகிறதா? என்ற சர்ச்சை வெடித்தது
பா.ஜ.க. ஆதரவு
தமிழக பா.ஜ.க. தலைவர்களும் கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற வகையில் கருத்துகளை வெளியிட்டு வந்தனர். கொங்கு நாடு தொடர்பான இலக்கிய ஆதாரங்களை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டிருந்தார்.
தலைவர்கள் கடும் கண்டனம்
கொங்கு நாடு தனி மாநில பிரிவினைக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இடதுசாரி தலைவர்களான கே. பாலகிருஷ்ணன், முத்தரசன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கொங்கு நாடு மாநில பிரிவினைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அதிமுக நிலைப்பாடு
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து அ.தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து விளக்கினார். கே.பி.முனுசாமி தமது பேட்டியில், திராவிட நாடு கோரிக்கை நாட்டின் வலிமை கருதி கைவிடப்பட்டது. பேரறிஞர் அண்ணா எடுத்த நிலைப்பாட்டையே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பின்பற்றினர்.
கொங்கு நாடு- அதிமுக எதிர்ப்பு
கொங்கு நாடு பிரிவினை என்பது விஷமத்தனமானது. கொங்கு நாடு பிரிவினை வந்தால் தமிழகத்தின் அமைதி பாதிக்கும். யாரையோ சிறுமைப்படுத்த கொங்குநாடு பற்றி பா.ஜ.கவினர் பேசுகின்றனர். சிறு சிறு மாநிலங்களாக இருக்கும் போது நாட்டின் பலம் குறையும். கொங்கு நாடு என்ற கருத்தை யார் முன்வைத்தாலும் தவிர்க்க வேண்டும்
நாட்டுக்கு நல்லது அல்ல
கொங்கு நாடு சிந்தனை நாட்டுக்கு நல்லது அல்ல. உலகம் இன்று கைக்குள் சுருங்கிவிட்டது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை அனைவரும் தமிழ்நாடு என்றுதான் கருதுகின்றனர். ஆகையால் கொங்கு நாடு மாநில பிரிவினையை யாரும் தூண்டிவிடக் கூடாது என்று கூறினார். மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுகு எதிராக அதிமுக பகிரங்கமாக கருத்து தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.