சென்னை: தான் திமுகவில் இணையவில்லை என்று மாஜி சபாநாயகர் தனபால் தெளிவுபடுத்தி உள்ளார்.. இதுகுறித்த விளக்கமும் அவர் அளித்துள்ளார்.
கொங்கு மண்டலத்தில் தனது கொடியை நாட்டவேண்டும் என திமுக பலமாக முயற்சித்து வருகிறது. அதற்காக பிற கட்சியில் இருப்பவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது
ஏற்கனவே, அமமுக பழனியப்பன், அதிமுக தோப்பு வெங்கடாசலம், மநீம மகேந்திரன் திமுக பக்கம் வந்துவிட்டனர்.. இந்த லிஸ்ட்டில் தனபாலும் வர போவதாக கூறப்படுகிறது.
அருந்ததியர்
இதற்கு காரணம், கொங்கு மண்டலத்தில், எப்போது தேர்தல் வந்தாலும், அதன் வெற்றியை தீர்மானிப்பதில் அருந்ததியர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.. அதனால், அந்த சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களைதான், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் குறி வைத்து வருவதாக தெரிகிறது.. அதனாலேயே தனபால் பெயர் அடிபட்டது.
ஓபிஎஸ்
தனபாலை பொறுத்தவரை எப்போதுமே ஓபிஎஸ்ஸின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.. இந்த முறை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு, பலத்த போட்டி எழுந்தபோது, ஓபிஎஸ்ஸுக்குதான் அந்த பதவியை தர வேண்டும் என்று முதலில் வரிந்து கட்டிக் கொண்டு வந்து சப்போர்ட் செய்தது தனபால்தான்.. ஆனாலும் இவர் பேச்சு அங்கு எடுபடவில்லை.. அதாவது கொங்கு மண்டலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் எடப்பாடியின் ஆதரவை முழுமையாக பெறாதவர்தான் தனபால்.
கொங்கு
இதை பயன்படுத்திதான் இவரிடம் திமுக பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டது.. கட்சியில் முக்கியத்துவம் இல்லாத நிலைமையிலும், தனக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்காத அதிருப்தியிலும், தனபாலும் கிட்டத்தட்ட இந்த முடிவுக்கு ஓகே தான் என்கிறார்கள்.. ஒருவேளை தனபால் திமுக பக்கம் வந்துவிட்டால், இனி அதிமுகவை கொங்குவில் மீட்டு கொண்டு வருவது கஷ்டம் என்றுகூட கூறப்பட்டது.. ஆனால், எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒருவிளக்கம் தந்துவிட்டார் தனபால்.
திமுக
அவர் சொல்லும்போது,”நான் திமுகவில் இணைவதாக தவறான தகவல் பரவி வருவது கண்டனத்துக்குரியது.. அதை நான் மறுக்கிறேன்.. 1972ல், அதிமுகவை எம்ஜிஆர் துவங்கிய போது, என் மாணவ பருவத்தில் இருந்தே, அக்கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறேன்.. என்னுடைய 45 வருட கால அரசியல் வரலாறு குறித்து அறியாதவர்கள், வதந்தியை இப்படி பரப்பி விட்டுள்ளனர்.
விளக்கம்
என் வாழ்க்கை அமைதியானது… எந்த சூழ்நிலையிலும், எந்தவொரு மாற்றத்தையும் விரும்பாதவன் நான்… அதிமுகவில் 7 முறை எம்எல்ஏவாக இருந்திருக்கிறேன்.. அமைச்சர், துணை சபாநாயகர், சபாநாயகர் வாய்ப்புகளை கட்சியும் எனக்கு வழங்கியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான், எனக்கு அத்தனை பதவிகளையும் வழங்கினார்… அதிமுக என்னை நல்லாவே வைத்திருக்கிறது.. பெருமைப்படுத்தி இருக்கிறது.. அதனால் கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன்” என்று பரவி வரும் வதந்திகளுக்கு எல்லாம் சேர்த்து ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தனபால்.