சென்னை: நில உச்ச வரம்பு ஆணைய புகார் குறித்து கடந்த 2008 ஆம் ஆண்டு விஜயகாந்த் பேசிய கருத்துகள் இன்றைய தினம் அவரது பிறந்தநாளில் வைரலாகி வருகிறது. இவரது பேச்சை கேட்டாலே புல்லரிக்கும் என நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த 2008ஆம் ஆண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிக சொத்துகளை வைத்திருப்பது தொடர்பான புகாரை நில உச்ச வரம்பு ஆணையம் விசாரித்து வந்தது.
இந்த புகாரில் மதுராந்தகம் பகுதியில் உள்ள விளாகம், அருங்குருக்கை உள்ளிட்ட 5 கிராமங்களில் விஜயகாந்திற்கு கூடுதல் நிலம் உள்ளதாக கூறப்பட்டது.
விஜயகாந்திற்கு நோட்டீஸ்
இதுகுறித்து விளக்கம் அளிக்க நில உச்சவரம்பு ஆணையம் விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு விஜயகாந்த் பதில் அளித்திருந்தார். இதுகுறித்து தேமுதிக சார்பில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசிய கருத்துகள் இன்று அவரது பிறந்தநாளையொட்டி வைரலாகி வருகிறது.
இடம் கொடுப்பீங்க
அந்த வீடியோவில் அவர் பேசுகையில் நில உச்ச வரம்பு சட்டமாம். நிலம்தானே வேண்டும். எடுத்துக்கோங்க.. மக்கள் கொடுத்ததுதானே. எனக்கு தேவையில்லை. எனக்கென்று ஒரு இடம் கொடுப்பீர்கள்தானே. என் மனைவிக்கு , என் மகன்களுக்கு என இடம் கொடுக்க வேண்டும் என உங்கள் சட்டத்தில் இடம் இருக்குதானே. அது கிடைத்தால் எனக்கு போதும்.
நாலு பேருக்கு சோறு
இவ்வளவு பேர் இருக்கீங்களே எங்க நாலு பேருக்கு சோறு போட மாட்டீங்களா. ஒவ்வொருத்தர் வீடா போனாலே என் ஆயுசு இருக்கும் வரை சாப்பிடலாமே. என்னய்யா காசு.. காசு.. பணம்.. அட போங்கய்யா நீங்களும் உங்க காசும். கோடி கோடியா சேர்த்து வச்சி எங்கய்யா கொண்டு போக போறீங்க?
செத்தாலும் இப்படிதான்
செத்தாலும் அரைஞான்கயிற்றை கூட அறுத்துக்கிட்டுதான் புதைக்கிறாங்க என விஜயகாந்த் ஆவேசமாக கடந்த 2008 ஆம் ஆண்டு பேசியிருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் விஜயகாந்த் பேசுவதை கேட்டாலே புல்லரிப்பதாக நெட்டிசன்கள் சொல்கிறார்கள்.