சென்னை: தாய், மகள் என 2 பேருக்கு தொடர்ந்து பாலியல் டார்ச்சர் தந்த புகாரின் பேரில் பாஜக பிரமுகர் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி… 55 வயதாகிறது.. இவர் பாஜகவில் பெரம்பூர் கிழக்குபகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறார்.
இவர் மீது ஒரு பெண், கடந்த 12-ம் தேதி கமிஷனர் ஆபீசில் புகார் தந்தார்.. அந்த புகாரில், “என் பெயர் சித்ரா.. 39 வயதாகிறது.. எருக்கஞ்சேரி பகுதியில் நான் என் கணவர் மற்றும் இரு பெண் பிள்ளைகளோடு குடியிருந்து வருகிறேன்… 2 பெண் பிள்ளைகளும் ஸ்கூல் படிக்கிறார்கள்..

பாஜக
என் வீட்டிற்கு எதிரே உள்ள அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்து வரும் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் ஏற்கனவே என்னிடமும் என் மகள்களிடமும் என் தெருவை சேர்ந்த மற்றவர்களிடமும் பிரச்சனை செய்து கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக கடந்த 26.03.2018 ஆம் ஆண்டு கொடுங்கையூர் ஸ்டேஷனில் புகார் செய்தேன்.. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளி வந்தார்.

மிரட்டல்
அதற்கு பிறகு, அவரது தொந்தரவுகளும் மிரட்டல்களும் அதிகமாகின… வீட்டை விட்டு கிளம்பும்போதெல்லாம், நாங்கள் எங்கள் வீட்டு வாசலில் இருந்தால் தகாத வார்த்தைகளால் திட்டி, உங்கள் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளாமல் விடமாட்டேன் என்று மிரட்டி விட்டு தான் செல்வார்… அவர் வீட்டின் ஜன்னலில் இருந்து, நானும் என் மகள்களும் வீட்டின் வாசலில் கோலம் போடும் போதெல்லாம் போட்டோ எடுப்பார்…

புகார்
இது சம்மந்தமாக என் கணவர் அவரை கேட்டபோதெல்லாம் அவர் மீது பொய் புகார் கூறி போலீசாரை மிரட்டி வழக்கு பதிவு செய்து விடுவார்.. எனவே, உடனடியாக பார்த்தசாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்ல, பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தன் குடும்பத்துக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரி, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் மனுவை சித்ரா மனுவை அளித்திருந்தார்..

அத்துமீறல்
இந்நிலையில், இந்த புகாரானது, கொடுங்கையூர் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது… இப்புகார் தொடர்பாக பார்த்தசாரதி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் , ஆபாச செயலை புரிதல், குந்தகம் விளைவிக்கும் வகையில் நடத்தல், பாலியல் அத்துமீறல், குற்றம்கருதி மிரட்டல், பெண்ணை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுதல், பெண் வன்கொடுமை உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.