சென்னை: உள்ளாட்சி தேர்தல் பணிகளை முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவிகள் அமைக்கப்படுவதாக மசோதாவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
இந்த 9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடத்தப்படாமல் இருந்ததால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த மாவட்டங்களில் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு
இந்த 6 மாத அவகாசம் கடந்த 4ஆம் தேதி நிறைவடைந்ததையொட்டி, மீண்டும் 6 மாத அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய கோடைகால சிறப்பு அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், எஞ்சியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3வது அலைக்குமுன் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
செப்டம்பர் 15 கடைசி நாள்
தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு செப்டம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கிறோம். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தாமல் இருப்பது அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது. எனவே, செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அட்டவணை, உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
பதவி நீட்டிப்பு
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவி காலம் மேலும் ஆறு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவான 9 மாவட்டங்களில் ஊராட்சிகளில் தனி அலுவலர் பதவி காலமும் மேலும் ஆறு மாதம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால நீட்டிப்பு செய்தது ஏன்
சட்டசபையில் தாக்கல்அமைச்சர்கள் கே.என். நேரு, பெரியகருப்பன் சட்ட மசோதாக்களை பேரவையில் தாக்கல் செய்தனர். ஜூன் 30ஆம் தேதியுடன் தனி அலுவலர் பதவி காலம் முடிய உள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தனி அலுவலர்கள் பதவி காலத்தை மேலும் ஆறு மாதம் நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.