டெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்கள் 4 லட்சத்தை எட்டப்போகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,005 பேராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,99,459 பேராக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது என்றாலும் மொத்த கொரோனா பாதிப்பு 3,04,11,634 பேராக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,786 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் பேர் கொரோனா தொற்றிலிருந்து 61,588 குணமடைந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,94,88,918 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஒரு லட்சத்துக்கும் கீழ் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 20 நாட்களாக 50 ஆயிரத்திற்கும் கீழே கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 1005 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,99,459 ஆக உயர்ந்துள்ளது. மரணமடைபவர்களின் விகிதமும் குறைந்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவமனைகளில் 5,23,257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் ஜூன் 30ஆம் தேதி வரைக்கும் 33,57,16,019 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா முதல் அலையில் தப்பிய இந்தியா இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்டது. 4 லட்சம் பேரை பலி கொண்டுள்ளது கொரோனா இரண்டாவது அலை. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கவனத்துடன் இருந்தால் மட்டுமே நோய் பாதிப்பில் இருந்து தப்ப முடியும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.