Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

ஆலயங்களில் தமிழில் ஒலிக்கப்போகும் வேத மந்திரங்கள்… அர்ச்சனை செய்ய அர்ச்சகர் தயார்

meenakshi-amman-temple-india

சென்னை: தமிழக ஆலயங்களில் உள்ள இறைவனுக்கு இனி மந்திரங்கள் தமிழில் ஒலிக்கப் போகின்றன. சென்னையில் வடபழனி முருகன் கோவில், கபாலீசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில்களில் வரும் 5ஆம் தேதி முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா என்றால் சிலை என பொருள். இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தர் என்ற சொற்கள் வந்தன. அர்ச்சித்தர் என்றாலும் சிலை என்றே பொருள்படும். ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபசாரங்களுள் அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது.

இறைவனுக்கு ஆறுவகையான உபசாரங்கள் செய்யப்படுகின்றன. அபிஷேகங்கள், ஆராதனைகள், பூக்களால் அலங்காரங்கள், அர்ச்சனைகள், நைவேத்திய படையல், திருவிழாக்கள் என கோவில்களில் இறைவனுக்கு செய்யப்படுகிறது. சாமி தரிசனம் செய்ய கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வார்கள்.

அவ்வாறு அர்ச்சனை செய்யப்படும்போது அர்ச்சகர்கள் சமஸ்கிருதத்தில் வேதமந்திரங்களை உச்சரிப்பார்கள். இது சமஸ்கிருதம் தெரியாத பக்தர்களுக்கு புரிவதில்லை. இதனால் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. 1955ஆம் ஆண்டில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடந்துள்ளன.

பல போராட்டங்களுக்குப் பிறகு திமுக ஆட்சிக்காலத்தில் தமிழில் அர்ச்சனை செய்யும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. 1969ஆம் ஆண்டில் லால்குடியில் பூவாளூரில் உள்ள திருமூலநாத சுவாமி கோயிலில் தமிழ் அர்ச்சனை தொடங்கப்பட்டது. இதற்கான விழா அப்போதைய திருச்சி மாவட்ட திமுக செயலாளரும் தற்போதைய தமிழகக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தாத்தாவுமான அன்பில் தர்மலிங்கம் தலைமையில் நடந்துள்ளது.

இந்தத் தமிழ் அர்ச்சனை தொடக்க விழாவில், அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே.வி.சுப்பையா கலந்துகொண்டார். பல ஆண்டுகாலமாக தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்ற நடைமுறை இருந்தாலும் முறையாக நடைபெறுவது கிடையாது. தற்போது அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் முறையை தீவிரப்படுத்தி இருக்கிறார்.

அரை நூற்றாண்டு காலமாகவே ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில், விரைவில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ள சேகர்பாபு, அவரது உத்தரவுப்படி வருகிற வரும் 5ஆம் தேதி வியாழக்கிழமை முதல் திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்குகிறது.

சென்னையில் வடபழனி முருகன் கோவில், கபாலீசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் தமிழிலும் அர்ச்சனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில்களுக்கு சென்று தமிழில் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் இனி தமிழில் வழிபாடு செய்யலாம். இதற்காக தமிழில் அர்ச்சனை செய்ய அர்ச்சகர்களையும் தேட வேண்டாம். கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயரும், செல்போன் எண்ணும் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டிருக்கும். அந்த எண்ணுக்கு அழைத்து விரும்பும் சன்னதியில் விரும்பும் தெய்வங்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

இந்த வசதி தமிழகத்தில் உள்ள முதுநிலை கோவில்களான 47 கோவில்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி நெல்லையப்பர், மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம், அழகர்கோவில், பழனி, மருதமலை, திருத்தணி, திருவானைக்காவல், திருவண்ணாமலை உள்ளிட்ட 47 கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவில்களில் குறைகள் இருந்தால் ஆன்லைனில் பக்தர்கள் புகார் செய்யலாம். 15 நாட்களுக்கு ஒருமுறை புகார்கள் அனைத்தும் இணைகமி‌ஷனர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

கோவில்களில் அர்ச்சனை செய்து வழிபடுவது என்பது வீட்டில் பூஜை செய்வதை காட்டிலும் சக்தி பெற்றது. அங்கிருக்கும் தெய்வம் மந்திர உச்சாடனங்களாலும், பூஜை வழிபாடுகளாலும் மிகவும் சக்தி பெற்றதாகும். சிலர் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட நாளில் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். தங்களின் பிறந்தநாளிலும் ஜென்ம நட்சத்திர நாளிலும் கோயிலில் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மையைக் கொடுக்கும். இதன் மூலம் இறை அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இனி ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்கப் போகின்றன. இறைவனுக்கு தமிழில் அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் மக்களுக்கு அந்த மந்திரங்களின் அர்த்தம் புரியும். அந்த மந்திரங்களின் சக்தியும் தெரியும்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp