புதுச்சேரி: புதுச்சேரியில் வெவ்வேறு இடத்தில் இயங்கி வரும் அழகு நிலையங்களில் விபச்சாரம் செய்து வந்த 2 பெண்கள் உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சுற்றுலா நகரமாக திகழ்ந்து வரும் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையும், அழகு நிலையம், மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பா சென்டர் என்கிற பெயரில் விபச்சார தொழில் நடந்து வருவதாகவும், இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். இந்தநிலையில் புதுவை சட்டம்-ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாராக புதிதாக பொறுப்பேற்றுள்ள லோகேஷ்வரன் மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பாக்களில் சோதனை நடத்த உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் நேற்று சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளர் இனியன் தலைமையிலான போலீசார் உருளையன்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மறைமலையடிகள் சாலையில் செயல்பட்ட மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபச்சாரம் தொழில் நடந்து வருவது தெரியவந்ததை அடுத்து, அங்கிருந்த 3 இளம்பெண்களை போலீசார் மீட்டு மசாஜ் சென்டர் நடத்தி வந்த கணவன் மனைவி உட்பட இரண்டு வாடிக்கையாளர்களையும் போலீசார் கைது செய்தனர்.அதேபோல் அண்ணா நகரில் செயல்பட்டு வந்த ஒரு அழகு நிலையத்தையும் சோதனை செய்த போது அங்கு 4 இளம் பெண்களை போலீசார் மீட்டு, அங்கு விபச்சாரம்தொழில் நடத்தி வந்த பெண் ஒருவர் உட்பட, 2 வாடிக்கையாளர்களை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து கோரிமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் சாலையில் செயல்பட்ட மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்தியதாக 3 இளம் பெண்களை மீட்டு மசாஜ் சென்டர் நடத்தி வந்த உரிமையாளர் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் நேற்று நள்ளிரவில் மூன்று அழகு நிலையங்களில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 10 இளம் பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர், மேலும் மசாஜ் சென்டர்கள் நடத்திய உரிமையாளர்கள் 5 பேர், வாடிக்கையாளர்கள் 4 பேர் என மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்து நீதிபதி இல்லத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.