கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான OPEC+ இன்று நடத்தி முடித்த ஆலோசனை கூட்டத்தில் சர்வதேச நாடுகளில் இருக்கும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, அமெரிக்கச் சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் அளவீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாத இடைவேளையில் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை கூடுதலாக 2 மில்லியன் பேரல் அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
OPEC அமைப்பு
இந்த OPEC அமைப்பில் அரபு நாடுகள் அதிகளவிலான ஆதிக்கம் செய்து வரும் நிலையில் ரஷ்யாவும் இக்குழுவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முடிந்துள்ள ஆலோசனை கூட்டத்தின் படி OPEC அமைப்பில் இருக்கும் நாடுகளின் தங்களது மாதாந்திர உற்பத்தி அளவை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை
இதன் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் விலை இன்று சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிகரித்துள்ளது. குறிப்பாக WTI கச்சா எண்ணெய் விலை 1.91 சதவீதம் அதிகரித்து 74.87 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.38 சதவீதம் வளர்ச்சி அடைந்து 75.65 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
விலை உயர்வு
பொதுவாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்தால் விலை குறையும், தற்போது அமெரிக்கச் சந்தையில் கச்சா எண்ணெய் இருப்பு அளவீடு குறையும் காரணத்தால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஈரான் மீதான தடை
இதற்கிடையில் ஈரான் நாட்டின் மீது விதிக்கப்பட்ட வர்த்தகத் தடைகளை விரைவில் நீக்க கோரி அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிடம் ஐநா வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே இதற்காகப் பேச்சுவார்த்தை துவங்கப்பட்டு உள்ள நிலையில், ஈரான் நாட்டின் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் ஆகியவற்றின் மூலம் காலதாமதம் ஆகி வருகிறது.
ஈரான் கச்சா எண்ணெய்
ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் சர்வதேச வர்த்தகச் சந்தைக்கு வந்தால் கச்சா எண்ணெய் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இதேபோல் அமெரிக்கச் சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் இருப்பு குறைந்து வரும் நிலையில் ஈரான் மீதனா வர்த்தகத் தடையை விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.