சென்னை :அரசியலில் இதல்லாம் இனி சாதாரணமப்பா.. காலங்கள் மாறும்.. காட்சிகள் மாறும்.. கலைந்துவிடும் ஒரு நாள் பொய்வேஷம்… அரசியல் என்பது உண்மையில் என்ன… அன்றைய நிலையில் ஆதாயம்.. இதுவே இன்றைய எதார்த்த அரசியல்.,,!
ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறும் காட்சிகள், சர்வசாதாரணமாக நடக்கின்றன. நேற்று வரை திட்டியவர்கள் இன்று பாராட்டுவது எதார்த்தமாகிவிட்டது.
ஊழல் ஆட்சி, அடிமை ஆட்சி, சாதி கட்சி, மதவாத கட்சி என்று தாறுமாறாக திட்டடிவர்கள் ஒன்று சேர்வது என்பது வெகுஎதார்த்தமாக நடக்கிறது. நாளை இவர்களே மீண்டும் திட்டுவது இனி எதார்த்தமாக போகிறது. காரணம் எந்த கட்சிகளுக்கு போனால் லாபம் என அரசியல் கட்சி தலைவர்கள் சாய்வது தான் காரணம். அத்துடன் அரசியல் லாபம் கருதி அவர்களை அந்த கட்சிகள் ஏற்பதும் காரணமாகும்,.
மகேந்திரன்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த மகேந்திரன், பத்ம பிரியா ஆகியோர் அதிலிருந்து அண்மையில் விலகினர். இப்போது திமுகவில் இணைந்துள்ளனர். இதேபோல் அதிமுக முன்னாள் எம் பி விஜிலா சத்தியானந்த் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இவர்கள் எல்லாம் நேற்று வரை திமுகவை கடுமையாக விமர்சித்தவர்கள். குறிப்பாக பத்ம பிரியா தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சுகள் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தின.
அன்புமணி
அரசியலில் இவர்கள் மட்டும்தான் கட்சி மாறுகிறார்களா என்றால் இல்லை.. கிட்டதட்ட இன்று அரசியலில் கட்சி மாறுவது என்பது எல்லா கட்சிகளிலும் தினசரி நடக்கும் காட்சிகளாகிவிட்டன. காங்கிரசில் இருந்த போது பாஜகவை கடுமையாக பேசிய குஷ்பு அங்கேயே போய் ஐக்கியமானார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எடப்பாடி பழனிசாமியை ஊழல் தலைவர் என்று விமர்சித்து ஆளுநரிடம் பட்டியல் கொடுத்துவிட்டு அதே கட்சியுடன் தேர்தலில் கூட்டணி சேர ஒப்புக்கொண்டார்.
தங்கதமிழ்செல்வன்
தற்போது அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மீது கடந்த காலங்களில் திமுகவினர் எழுப்பாத விமர்சனங்களா அல்லது அவர்தான் திமுக குறித்து பேசாத பேச்சா இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. தற்போது திமுகவில் உள்ள அமைச்சர்களில் எத்தனை பேர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் என்பது பலருக்கும் தெரியும். அவர்கள் எல்லாம் கடந்த காலங்களில் பேசாத பேச்சுக்களை இப்போது வந்துள்ள யாரும் பேசிவிட முடியாது. இதேபோல் அதிமுக மற்றும் அமமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த தங்க தமிழ்செல்வன் உள்பட முன்னாள் எம்எல்ஏக்கள் பலர் எப்படியெல்லாம் முன்பு பேசினார்கள் என்பதும் மக்களுக்கு தெரியும்.
ஆதாயம் கருதி சேர்கிறார்கள்
மறப்போம் மன்னிப்போம் என்ற பாணியில் வரும் அனைவரையும் தங்கள் இயக்கத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல கட்சிகள் சேர்த்துக் கொள்கின்றன. அவர்களும் நேற்று வரை பாராட்டியவர்களை இன்று திட்ட தொடங்குகிறார்கள். ஊழல் கட்சி என்றும் ஊழல் வாதிகள் என்றும் பேசுகிறார்கள். ஆனால் இதைஎல்லாம் வேடிக்கை பார்க்கும் மக்கள், எதை பற்றியும் கண்டுகொள்வதும் இல்லை.
அரசியலில் சாதாரணமப்பா
உண்மையில் இன்று நடப்பது சந்தர்ப்பவாத அரசியல் இதற்கு முழு காரணம் மக்கள். யார் நல்லவர், யாருக்கு ஒட்டுப்போட்டால் நல்லது செய்வார் என்று பார்க்காமல் கட்சியை பார்த்தும், சின்னத்தை பார்த்தும் வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரை இந்த சந்தர்ப்பாத அரசியல் மாறவே மாறாது. காரணம் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுக்கு உள்ள மக்கள் செல்வாக்கு, தங்களுக்கு உள்ள பேச்சுத்திறமை, ஆகியவற்றை பயன்படுத்தி கட்சிகளில் சேர்ந்து பதவிகளை பெற்று தங்களை வளமாக்குகிறார்கள். எனவே ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறும் காட்சிகள் சர்வ சாதாரணம்.. கவுண்டமணி பாணியில் சொல்வது என்றால் அரசியலில் இதல்லாம் இனி சாதாரணமப்பா.. !