சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார் அவருக்கு வயது 80. மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக அவைத்தலைவராக உள்ள மூத்த தலைவர் மதுசூதனன். கடந்த சில ஆண்டுகளாகவே இவரது உடல்நிலையில் சில பிரச்சினைகள் இருந்தன. 80 வயதான மதுசூதனன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக 16 வயதில் ரசிகர் மன்றத்தை தொடங்கினார். எம்ஜிஆர் அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் அதிமுக தொண்டராக இருந்து அரசியலுக்கு வந்தவர். சென்னையின் செல்வாக்கு மிக்க நபராக இருந்தவர் மதுசூதனன்.
எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிலும் அவைத்தலைவராக இருந்தார். கடந்த 1991-96 வரையிலான முதல் ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையிலேயே கைத்தறித்துறை அமைச்சராக இருந்துள்ளார். மேலும், ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார். அவர் இருக்கும் வரை அவர்தான் என்றுமே அவர்தான் அவைத்தலைவர் என்று கூறினார் ஜெயலலிதா. 2017ஆம் ஆண்டு ஒபிஎஸ், சசிகலா இடையே ஏற்பட்ட பிரச்சினையால் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். மீண்டும் கட்சி ஒன்றாக இணைந்த பின்னர் மீண்டும் அதிமுகவின் அவைத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த ஜூலை மாதம் மதுசூதனனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினையை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை திடீரென மோசமானது, மேலும் வென்டிலேட்டர் உதவியுடனும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக ஆபத்தான கட்டத்தில் இருந்து மெல்ல அவர் மீண்டார். இருந்த போதிலும் தொடர்ந்து மருத்துவமனையிலேயே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில், அவரது உடல்நிலை நேற்று மீண்டும் கவலைக்கிடமான நிலைக்குச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியானது. சிகிச்சை பலனின்றி அவர் காலமாகிவிட்டார். மதுசூதனன் மறைவுக்கு அதிமுக தலைவர்களும் பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.