Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

அ.தி.மு.கவில் மீண்டும் சலசலப்பு ஒட்டுமொத்த அ.தி.மு.கவுக்கும் முடிவு செய்யட்டும்: டி.டி.வி.தினகரன் விளக்கம்…

ttv-dinagaran

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் நேற்று மாலை அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க நகர, ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.கவினர், சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியை சந்தித்துள்ளது.

அ.தி.மு.க தோல்விக்கு கட்சி பிளவு தான் காரணம் என்று பொதுமக்கள் மத்தியிலும், கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பரவலான பேச்சு அடிபட்டது. அதற்கு பிளவுபட்ட அ.தி.மு.கவை ஒருங்கிணைக்க வேண்டும். சசிகலா மற்றும் டி.டி.விதினகரன் ஆகியோர்களை கட்சியில் சேர்த்து அ.ம.மு.கவை அ.தி.மு.கவுடன் இணைத்தால் மட்டுமே கட்சியை பலப்படுத்த முடியும் என்று ஓ.பன்னீர் செல்வத்திடம் தொண்டர்கள் வலியுறுத்தியதாக செய்திகள் வெளிவந்தன. இந்த விவகாரம் அ.தி.மு.கவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, ‘அதிமுக தலைமை சரியில்லை என்றும் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அத்துடன், அதிமுக தோல்விக்கு, அனைவரும் தனித்தனியாக இருந்ததே காரணம் என்றும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செம்மலை, மாநில கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ‘இன்னொரு கட்சி குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது என்பதுதான் எனது கருத்து. அதுவும் தேர்தல் தோல்வி நேரம் என்பதால் நான் கருத்து கூற முடியாது. ஆனால், யாராக இருந்தாலும் அவர்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் என்னுடைய பெயரும் அடிபட்டுள்ளது. ஒருவேளை அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் நாங்கள் கட்சியில் இணைய வேண்டும் என்று விரும்பியிருக்கலாம். ஒட்டுமொத்த அ.தி.மு.கவும் என்ன விரும்புகிறது என்பதைப் பார்க்கலாம். அதன்பிறகு முடிவு எடுத்துகொள்ளலாம். எங்கள் மீது எந்த தவறும் கிடையாது. அது அனைவருக்கும் தெரியும். அ.தி.மு.க தலைமை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவர்கள் முடிவு எடுத்துவிட்டு வரட்டும். அ.தி.மு.க தொண்டர்கள்தான் எனது எஜமானர்கள்.

நான் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்க முடியாது. அ.தி.மு.கவின் ஒட்டுமொத்த தொண்டர்கள், நிர்வாகிகளின் முடிவைப் பொறுத்ததான் நான் என்னுடைய முடிவை தெரிவிக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp