நீலகிரி: குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் உலா வரும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கரிமறா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வள்ளுவர் நகர், வாசகி நகர், பெரியார் நகர், வசம்பள்ளம் ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் இங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பது சகஜம் தான் என்றாலும், சமீப காலமாக இரவு நேரங்களில் அதிகளவில் வனவிலங்குகள் உலா வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் கூலாக உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மேலும் பீதியை கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், இரண்டு சிறுத்தைகள் மற்றும் 3 கரடிகள் உலா வருகிறது. இரவு நேரத்தில் உலா வரும் வனவிலங்குகளை பிடிக்க பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.