Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

தமிழ்நாட்டில் இனிமேல் மின்வெட்டு இருக்காது.. செந்தில் பாலாஜி சொன்ன ஸ்வீட் நியூஸ்!

power-cuts232-27-1493266542

சென்னை: ஒட்டுமொத்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதால் இனிமேல் தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுக்க கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டது. திமுக ஆட்சி காலம் வந்ததும் மின்வெட்டு பிரச்சினை வந்து விட்டது என்று அதிமுக தலைவர்கள் குற்றம் சாட்ட ஆரம்பித்தனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் பராமரிப்புப் பணி செய்யவில்லை, செடிகள் வளர்ந்து மின்கம்பிகளில் உரசும் அளவுக்கு விட்டுவிட்டனர், அணில்கள் மின்சாரக் கம்பியில் தாவி செல்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்வெட்டு ஏற்படுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கூறியிருந்தார்.

செந்தில் பாலாஜி பேட்டி

இந்த நிலையில்தான் இனிமேல் மின்வெட்டு இருக்காது என்ற ஒரு நல்ல செய்தியை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதோ அவரது பேட்டி: 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மின் திட்டங்களும் கடந்த பத்து வருடங்களாக செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன. அந்தத் திட்டங்களை எல்லாம் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

கணக்கீடு

அறிவிக்கப்பட்டு செயல்படுத்த தயாராக இருந்த திட்டங்கள் அனைத்தும் மறுசீரமைக்கப்பட்டு விரைவாக நிறைவேற்றப்பட்டு மின் உற்பத்தியை துவங்க கூடிய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு மின் தேவை அதிகரித்துள்ளது, என்பதை கணக்கிட்டு வருங்காலங்களில் எவ்வளவு அதிகரிக்கக்கூடும் என்பதை கணித்து அதற்கு ஏற்ப மின் உற்பத்தியை செய்ய இருக்கிறோம்.

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் கிடையாது

நம்முடைய தேவைகளுக்கு, நாம் உற்பத்தி செய்யும் அளவுக்கு வரும்போதுதான் மின் மிகை மாநிலம் என்று நம்மை அழைத்துக் கொள்ளலாம். மின்சார இணைப்பு விண்ணப்பம் செய்து விட்டு காத்திருக்காமல் உடனடியாக கிடைத்தால் அது மின்மிகை மாநிலம். 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்து விட்டு இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர, தட்கல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மின் இணைப்புக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருப்போர் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் அதிகம். இவ்வளவு பேருக்கு மின்னிணைப்பு கொடுக்காமல் இருந்து கொண்டு, மின் மிகை மாநிலம் என்று சொல்லக்கூடாது.

கருணாநிதி ஆட்சியில்தான் சிறப்பாக இருந்தது

கடந்த பத்து வருட அதிமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு 2 லட்சத்து 8000 அளவுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு முந்தைய கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் வெறும் 5 ஆண்டுகளில் 2 லட்சத்து 4000 மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. எது சிறப்பான மின்வாரிய செயல்பாடு என்பதை நீங்களே தெரிந்துக்கொள்ளலாம்.

10 வருடங்களில் மின்சார திட்டம் இல்லை

கடந்த காலங்களில் செய்த குளறுபடிகள், மின்வாரியத்திற்கு ஏற்பட்ட அதிகப்படியான செலவினங்கள், அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரம் உள்ளிட்ட முறைகேடுகளை சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட மின் இணைப்பு திட்டம் எது என்பதை சொல்ல முடியுமா? கருணாநிதி ஆட்சிக் காலத்திற்குப் பிறகு எந்த ஒரு புதிய மின்சார திட்டமும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் மின்சாரத் துறையில் ஏற்பட்ட தவறுகள் ஆய்வு செய்யப்படும் என்று ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளது. அதை செய்வோம்.

மின்வெட்டு இருக்காது

தமிழ்நாடு முழுக்க மின்வெட்டு இருப்பதாக பொத்தாம் பொதுவாக புகார் கூறக்கூடாது . ஜூன் 19ம் தேதி தொடங்கிய, பராமரிப்பு பணிகள் தற்போது முழுமையாக முடிவடைந்து விட்டன. எனவே தமிழ்நாட்டில் இனி மின்வெட்டு ஏற்படாது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டும் தான் நடைபெறும். மாதாந்திர பணிகளின்போது மட்டும்தான் மின்சாரம் துண்டிக்கப்படும். இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp