சென்னை: மத்திய அரசை ஒன்றிய அரசு என திமுகவினரும், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சரவை சகாக்களும் அழைக்க தொடங்கியுள்ளது பாஜகவினரை கோபப்படுத்தி வருகிறது. இன்று பாஜக தலைவர் முருகன் அளித்த பேட்டி, இதற்கு ஒரு உதாரணம்.
பாரதிய ஜன சங்க நிறுவனர் டாக்டர்.ஷாம் பிரசாத் முகர்ஜியின் 68வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது
ஆளுநர் உரை
ஆளுநர் உரை முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டும் ஏமாற்றமளிக்கும் உரையாக உள்ளது. இல்லதரசிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறியது குறித்தோ, காஸ் மானியம் பற்றியோ, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்தோ நடவடிக்கை இல்லாமல் வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
மாணவர்களை குழப்பாதீர்கள்
இந்த அரசு வந்து 40 நாள் ஆகியுள்ளது, ஆனால் கமிட்டி அமைப்பதை மட்டும் பணியாக கொண்ட கமிட்டி அரசாக தான் உள்ளது. நீட் தேர்வு குறித்து ஆராய அமைத்துள்ள கமிட்டி தேவையில்லாதது. இந்த கமிட்டியை கலைக்ககோரி உயர் நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு தொடுத்துள்ளோம். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை குழப்பாதீர்கள். அவர்களை தேர்வுக்கு படிக்க ரெடி செய்யுங்கள்.
மின் வெட்டு
கடந்த 10 ஆண்டுகளில் மின்வெட்டு இல்லாமல், தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது. ஊரடங்கில் பல நிறுவனங்களும் செயல்படாமல் இருக்கிறது. ஆனால் ஏன் மின்வெட்டு இருக்கிறது. இதுபற்றி, முதல்வர் தெளிவான விளக்க அறிக்கை தர வேண்டும்.
ஊராட்சி முதல்வரா
இந்திய அரசியலமைப்பில் எங்கும் குறிப்பிடாத நிலையிலும், ஒன்றிய அரசு என மத்திய அரசை அழைப்பது அம்பேத்கரை அவமதிக்கும் செயல். ஒன்றிய அரசு என குறிப்பிட்டால் பாஜக பதறுவதாக கூறுவது தப்பு. மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது தவறானது. அப்படிப் பார்த்தால், தமிழ்நாடு ஊராட்சிகளின் கூட்டமைப்புதான். அதற்காக, ஊராட்சி அரசு என்று அழைக்க முடியுமா, ஊராட்சியின் முதல்வர் ஸ்டாலின் என்று அழைக்கலாமா? என்று எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.