சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அடிக்கடி மின் வெட்டு பிரச்சினை ஏற்பட, அணில்கள் கரண்ட் கம்பியில் தாவி சேதம் ஏற்படுத்துவதும் ஒரு காரணம் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னாலும் சொன்னார், சமூக வலைத்தளங்கள் முழுக்க மீம்களால் நிரம்பி வழிகிறது.
அணில்தான் காரணம் என்று கூறியதை நம்பி, அனில் கும்ப்ளேவை சிலர் தாக்கிவிட்டனர் என்று கூறி மீம் போட்டு, அவர், ஒருமுறை, தலையில் கட்டுப் போட்டு விளையாடிய போட்டோவைக் கூட இப்போது வைரலாக்கிவிட்டனர் நெட்டிசன்கள்
அணில்கள் சேதம் ஏற்படுத்துவது உலகம் முழுக்க உள்ள நடைமுறைதான். ஆனால், ஏன் கடந்த 30 நாட்களாக மட்டும் அணில்கள் தமிழகத்தை குறி வைத்து தாக்குகின்றன எனக் கேட்டு குமுறல் மீம்களை போட்டு வருகிறார்கள்.
உலகத்தின் மிகப்பெரிய ஆபத்தாம்
அணில்கள்தான் இந்த உலகம் பார்த்த மிகப்பெரிய ஆபத்து. அவஞ்சர்ஸ் கூடி விட்டன என்று கூறுகிறார் இந்த நெட்டிசன். ஊரையே அணில்கள் நாசம் செய்வது போன்ற ஒரு படத்தையும் அவர் இணைத்துள்ளார்.
10 வருஷமா வெளிநாடு
10 வருசமா வெளிநாட்டுல இருந்தோம். இப்போதான், தமிழ்நாடு வந்து கம்பிக்கு கம்பி தாவுனோம். அதான் கம்ப்ளைன்ட் செய்கிறார்கள் என 10 வருடமாக மின் வெட்டு இல்லாததை சொல்லிக்காட்டுகிறது இந்த மீம்.
அணில் இருக்கு
இனிமேல் கரண்ட் பிரச்சினை என்று வீட்டுக்கு எலக்ட்ரிஷியனை கூப்பிட்டால், சந்திரமுகி படத்து மாந்ரீகர் போல, வீட்டில் அணில் நடமாட்டம் இருக்குன்னு சொல்வாரோ என கூறுகிறது இந்த மீம்.
தெர்மாகோல் பற்றி கிண்டல் செஞ்சீங்களே
தெர்மாகோல் தண்ணீர் நீராவியாக மாறுவதை 32 சதவீதம் குறைக்க முடியும். ஆனால் நாம் அப்படிச் செய்த கடந்த ஆட்சி அமைச்சரை கிண்டல் செய்தோம். இப்போ அணில் பிரச்சினையில் இந்த ஆட்சி அமைச்சர் கிண்டலுக்குள்ளாகியுள்ளார் என்கிறார் இந்த நெட்டிசன்.
கொய்யாப் பழம்
கொய்யாப் பழம் சாப்பிட அலையுற அணிலை இப்படி கோர்த்து விட்டுட்டீங்களே என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.
கரண்ட் இருந்துச்சே
ஆமா 10 வருஷம் அதிமுக ஆட்சியில் ஏன் கண்ட் கம்பில நீங்க ஓடலன்னு கேட்டால், அப்போ எப்போதுமே கரண்ட் இருந்தது என கிண்டல் செய்கிறதாம் இந்த அணில்.
தாவுவோம், என்ன பண்ணுவாங்க
தாவாதே அணிலே என இனி அணில்களிடம் கெஞ்சனும் போல இருக்கு. ஆனா அணில்கள், வடிவேலு மாதிரி நம்மை கிண்டல் செய்யுமோ என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
அணில் மின்நிலையம்
இப்படியே போனால் இனி அனல் மின் நிலையங்களை அணில் மின் நிலையங்கள் எனப் பெயர் மாற்றம் செய்துவிடலாம் என்று சொல்கிறார் இந்த நெட்டிசன்.