சென்னை: வாசிங்டன் சுந்தர் இங்கிலாந்து தொடரில் பங்கேற்பதில் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரின் தந்தை செய்துள்ள விஷயம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடர் பாதியில் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மீது திரும்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளதால் ஐபிஎல் தொடரில் நடைபெற்ற தவறு எதுவும் இந்த தொடரில் நடக்கக்கூடாது என பிசிசிஐ பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சுற்றுப்பயணம்
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஜூன் 18ம் தேதி இங்கிலாந்தின் ஹேம்சைர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனை முடித்துவிட்டு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்கள் நாளை முதல் மும்பை 14 நாட்கள் பபுளில் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். பின்னர் அனைவரும் வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது.
வாய்ப்பு
இந்த தொடரில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய தொடரின் போது வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாக அவருக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைத்ததுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2018ம் ஆண்டே இவருக்கு இங்கிலாந்து மண்ணில் டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பயிற்சி ஆட்டத்தின் போது ஏற்பட்ட காயத்தால் ஒரு போட்டியில் கூட பங்கேற்க முடியாமல் பாதியிலேயே நாடு திரும்பினார்.
தனி வீடு
எனவே இந்த முறை கண்டிப்பாக வாஷிங்டன் சுந்தர் விளையாடிவிட வேண்டும் எனவும் கொரோனா காரணமாக தடைபட்டுவிடக்கூடாது எனவும் அவரின் தந்தை முக்கிய முடிவை எடுத்துள்ளார். சுந்தரின் தந்தை வருமான வரித்துறையில் பணிபுரிந்து வருகிறார். சென்னையில் கொரோனா அதிகளவில் இருக்கும் சூழலிலும், அவர் வாரத்தில் 3 -4 நாட்கள் அலுவலகம் செல்ல வேண்டும். எனவே அவர் வெளியில் சென்று வருவதால் சுந்தருக்கு ஏதேனும் கொரோனா பாதிப்பு வந்துவிடக்கூடாது என வேறொரு வீட்டில் தனியாக தங்கி, அங்கிருந்து அலுவலகம் சென்று வருகிறார்.
நிறைவேறுமா சுந்தரின் கனவு
இதுகுறித்து பேசியுள்ள அவர், சுந்தர் ஐபிஎல் தொடரில் இருந்து வந்ததில் இருந்து நான் வேறு வீட்டில் தான் தங்கியுள்ளேன். எனது மனைவியும், சுந்தரும், வீட்டை விட்டு வெளியே வராமல் தனியாக உள்ளனர். வீடியோ காலின் மூலமாக தான் அவர்களை பார்த்து வருகிறேன். இங்கிலாந்தில் விளையாட வேண்டும் என்பது வாஷிங்டன் சுந்தரின் கனவு. எனவே என்னால் அவரின் கனவு தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக இதை செய்துள்ளேன் எனத்தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.