குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களுக்கு சென்னை மாநகரக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அபராதத் தொகையை செலுத்தும்படி நீதிமன்றத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டாலும், 8 ஆயிரத்து 912 பேர் இன்னும் அபராதத்தை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதனால், நிலுவையில் உள்ள அபராதத் தொகையை வசூலிக்க சென்னை மாநகரில் 10 இடங்களில் செயல்பட்டு வரும் கால் சென்டர்கள் மூலம் தகவல் தெரிவித்து வழக்குகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் 425 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக 43 லட்சத்து 96 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள குடிபோதை வழக்குகளை தீர்வு காண்பதற்காக போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக செயல்படுபவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு இதுவரை 263 நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.