Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

மேயர் பதவிக்கு போட்டி போடும் கூட்டணி கட்சிகள்… முதல் வரிசையில் விசிக : அதிர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்..!!

ks-alagiri-stalin-thiruma-updatenews360

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நிலையில், மேயர் பதவிகளைப் பெற கூட்டணி கட்சிகள் கொடுக்கும் நெருக்கடியால் முதலமைச்சர் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளையும் திமுக அப்படியே முழுமையாக கைப்பற்றி விட்டது. அதேபோல 138 நகராட்சிகளில் 134ம், 489 பேரூராட்சிகளில் 435ம் திமுக கூட்டணியின் வசமே சென்றுள்ளது.

கூட்டணியில் திமுக ஒதுக்கிய இடங்களில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பெரும்பாலானவற்றில் வெற்றி பெற்று விட்டன. இதனால், மேயர், துணை மேயர் பதவிகளை கேட்போம் என்று தேர்தல் முடிந்த உடனே கூட்டணி கட்சித் தலைவர்கள் தெரிவித்து விட்டனர். மேலும், இது தொடர்பாக திமுக தலைமையை சந்தித்தும் முறையிட்டுள்ளனர்.

அதேவேளையில், மேயர், துணை மேயர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர்களின் பரிந்துரை பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலினிடம் சமர்பித்த மாவட்ட நிர்வாகிகள், 21 மேயர் பதவிகளையும் திமுக வசமே வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி, “மத்தியில் 60 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறோம். கடந்த 7 ஆண்டுகள் ஆளாமல் இருப்பதும் ஒரு அனுபவம்தான். ஒருநாள் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக வரும். மேயர் பதவிகளை திமுகவிடம் கேட்டிருக்கிறோம்,” எனக் குறிப்பிட்டார்.

இதேபோல, திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கணிசமான வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், 9 மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவி எங்களுக்கு ஒதுக்குமாறு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் கேட்டுள்ளோம்,” எனக் கூறியுள்ளார்.

திமுக தயவு இல்லாமல் கூட்டணி கட்சிகளால் இவ்வளவு வெற்றி பெற்றிருக்க முடியாது எனக் கூறப்பட்டு வந்தாலும், திமுக தனி மெஜாரிட்டியுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, பெரும்பாலான இடங்களை திமுக தன்வசமே வைத்துக் கொள்ளுமே தவிர, விசிக, காங்கிரஸ் கேட்பதைப் போல, கேட்கும் இடங்களை தந்துவிடாது. பெயரளவுக்கு ஒரு சில இடங்களில் முக்கியத்துவம் வழங்கப்படலாம். தமிழகத்தில் திமுகவுக்கு மக்களிடம் அமோக ஆதரவு இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் நம்புவதால், திமுகவின் முடிவுக்கு கூட்டணி கட்சிகள் கட்டுப்பட்டே ஆக வேண்டிய நிலை மட்டுமே உள்ளது, என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp