காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே திமுக பிரமுகர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர் சேகர்(52). கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு புரட்சிபாரதம் கட்சியின் காஞ்சிபுரம் நகர தலைவராக பல ஆண்டுகள் செயல்பட்டு வந்தார். தற்போது திமுக கட்சியின் மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவரது மனைவி சைலஜா கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்நிலையில் சேகர் தனது இருசக்கர வாகனத்தில் கோனேரி குப்பத்தில் உள்ள தலையாரி தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரிடம் பேசுவது போல் நெருங்கி திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சேகரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக கோனேரிக்குப்பம் பகுதியில் மிகுந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.