முழு வெற்றி
2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் போலவே தமிழகத்தில் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் அமைந்துள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளையும் திமுக
அப்படியே முழுமையாக கைப்பற்றி விட்டது. அதேபோல 138 நகராட்சிகளில் 134ம், 489 பேரூராட்சிகளில் 435ம் திமுக கூட்டணியின் வசமே சென்றுள்ளது.
இதை, கடந்த 5 ஆண்டுகளாக எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் பிரிந்து விடாமல் ஒரே அணியாக நீடிக்கும் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட 13 கட்சிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
இதுவரை இல்லாத வெற்றி
அதேநேரம் கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக போன்ற முக்கிய கட்சிகள் ஒரே அணியாக கை கோர்த்து போட்டியிட்டது போல, இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவில்லை என்பதும் திமுக கூட்டணியின் அபார வெற்றிக்கு முக்கிய காரணம்.
மாநகராட்சியில் 100க்கு 100 சதவீதம், நகராட்சியில் 98 சதவீதம் பேரூராட்சியில் 90 சதவீதம் என்கிற அளவிற்கு திமுக கூட்டணி வெற்றியை குவித்துள்ளது.இதுவரை தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியின் தலைமையில் அமைந்த ஒரு மிகப் பெரிய கூட்டணி இந்த அளவிற்கு அபார வெற்றி கண்டது இல்லை.
அதேநேரம் 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட நேரடி மாநகராட்சி தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக மாநிலத்தில் இருந்த 10 மாநகராட்சி மேயர் பதவிகளையும் கைப்பற்றி 100 சதவீத வெற்றியைக் குவித்தது.
அப்போது திமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மதிமுக ஆகியவை தனித்து போட்டியிட்டன என்பது நினைவுகூரத்தக்கது.
கூட்டணியில்லாததால் தடுமாற்றம்
இம்முறை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி கட்சியினருக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தி கணிசமான வெற்றியை பெற்றிருந்தாலும் கூட அது மேயர் பதவியையோ, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளையோ கைப்பற்றும் அளவிற்கு உதவவில்லை.
அதாவது தேர்தல் நடந்த 12 ஆயிரத்து 602 வார்டுகளில் திமுக கூட்டணி சுமார் 8500 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. தனித்துப் போட்டியிட்ட அதிமுக 2000 வார்டுகளில் வென்றுள்ளது. இந்தக் கணக்கின்படி பார்த்தால் திமுக கூட்டணி 68 சதவீதமும், அதிமுக 16 சதவீத வார்டுகளையும் கைப்பற்றியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது திமுக கூட்டணியின் கை ஓங்கி இருப்பதுபோல் தெரிகிறது.
அதேநேரம் கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கடுமையான உழைப்பு, பிரச்சார உத்தியின் மூலம் இந்தத் தேர்தலில்
22 மாநகராட்சி வார்டுகள், 56 நகராட்சி வார்டுகள், 225 பேரூராட்சி வார்டுகள் என
300-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவை வெற்றி பெற வைத்து கட்சியை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வந்து விட்டார்.
சென்னை மாநகராட்சிக்குள் பாஜக
சென்னை மாநகராட்சியின் பல வார்டுகளில் பாஜகவுக்கு அதிக சதவீத வாக்குகள் கிடைக்க வைத்து திமுக கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியும் அளித்துள்ளார்.
அதுவும் 134-வது வார்டில் முதல்முறையாக பாஜகவை சேர்ந்த உமா ஆனந்தன் என்ற பெண்மணி வெற்றி பெற்று சென்னை மாநகராட்சிக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக கூட்டணியிலிருந்த பாமக தற்போது சுமார் 125 வார்டுகளிலும் தேமுதிக 60க்கும் கூடுதலான இடங்களிலும் வென்றுள்ளன.
எதிர்கட்சிகளால் சாதகம்
இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் சில உண்மைகளை உணர்ந்து கொள்ள முடிகிறது, அது அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுக்கு பாடம் கற்றுத் தருவது போலவும் அமைந்திருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
“அதிமுகவும், பாஜகவும் இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்டது, கொங்கு மண்டலத்திலும் தென் மாவட்டங்களிலும் இரு கட்சிகளின் பெரும் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. பாமக தனித்து போட்டியிட்டதும் சில மாவட்டங்களில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு சாதகமாக அமைந்த விஷயம்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்போது மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைய வேண்டும் என்றால் தமிழகத்திலிருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிக எம்பிகள் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.
இதில் யார் உறுதியாக இருக்கிறார்களோ, இல்லையோ தேசிய பாஜக தலைமையும், தமிழக பாஜகவும் மிகவும் துடிப்புடன் இருக்கின்றன. தமிழகத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்திய பாஜக அரசு பற்றியும் கடந்த 8 ஆண்டுகளாக திமுக கூட்டணி கட்சிகள் கட்டமைத்து வரும் தவறான பிம்பத்தை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நிச்சயம் தகர்த்தெறிந்து விடுவார் என்று நம்பலாம்.
அதுமட்டுமின்றி வரும் ஏப்ரல் மாதம் முதலே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தமிழகத்தில் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை வீடுவீடாக கொண்டு செல்லும் விதமாக அவர் பிரசாரம் செய்வதும் உறுதி..
அதன்மூலம் கிராமங்கள்தோறும் பாஜகவின் கட்டமைப்பை அண்ணாமலை இன்னும்
பலப் படுத்துவார். அது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கும் பிறகும் கூட தொடரும்.
தமிழகத்தில் ஒருபோதும் தாமரை மலராது, பாஜக ஆழமாக கால் ஊன்றாது என்று கடந்த சில மாதங்களாக கேலி பேசி வந்த காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், மதிமுக கட்சி தலைவர்களின் பேச்சை அண்ணாமலை முறியடித்து இருப்பதால் இனி அவரைப் பற்றி பேசினால் வம்பு எதற்கு என்று இந்த கட்சிகள் மௌனமாகி விடவும் வாய்ப்பு உள்ளது. அது பாஜகவுக்கு சாதகமான ஒரு அம்சம்தான்.
ஒருவேளை மோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளர் யார் என்பது தெளிவில்லாமல், குழப்பமான நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் அதுவும் தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக அமையும்.
கூட்டணியே தீர்வு
2024 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கணிசமான வெற்றி பெறுவதற்கு அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை மீண்டும் ஒரே அணியாக உருவாக வேண்டும். ஏனென்றால் சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
இதைத்தான் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் உணர்த்துகின்றன. இந்த கட்சிகளின் தலைவர்கள் இதனை புரிந்து கொள்வதும் அதற்கேற்ப ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதும், விட்டுக் கொடுப்பதும் மிக மிக அவசியம். அப்போதுதான் எதிர்பார்க்கும் வெற்றி இலக்கை அடைய முடியும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டனர்.