கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கடந்த 29ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி முதல் நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புனித் திடீர் மரணம் கன்னட திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மரண செய்தியை கேட்டு ரசிகர்கள் தற்கொலையில் ஈடுபட்டனர். மேலும் அதிர்ச்சியிலும் ரசிகர்கள் மரணித்தனர்.
புனித் ராஜ்குமாரின் உடல் பெங்களூருவில் உள்ள கண்டீரவா விளையாட்டு திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது ரசிகர்கள், உறவினர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் ஏராளமானோர் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
கூட்டம் கூடியதாக நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார், ஒரு கட்டத்தில் லேசான தடியடி நடத்தினர், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த், முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்திய மாநில அமைச்சர்கள், தெலுங்கு திரையுலகினர், தமிழ் நடிகர்கள் பிரபுதேவா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவரது மகள் திருதி, தந்தையின் உடலை கண்டு கதறி அழுதார். அப்பா எழுந்து வாங்க என கதறி அழுத காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்தது.
இதையடுத்து அவரது மகளை தாய் அஸ்வினி, சகோதரி வந்திதா, நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் ஆறுதல் கூறி தேற்ற வைத்தனர். இரவு முழுவமும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல் இன்று அதிகாலை 4 மணிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
பின்னர் கண்டீரவா ஸ்டூடியோவில் அவரது தந்தை ராஜ்குமார், தாய் பார்வத்தம்மா அடக்க செய்யப்பட்ட பகுதியில் புனித் ராஜ்குமா உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.