இரவோடு இரவாக போலீஸ் ஆக்சன்.. தமிழ்நாடு முழுக்க ரவுடிகளுக்கு வைக்கப்பட்ட செக்
சென்னை: நேற்று தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி ரவுடிகளுக்கு செக் வைத்தனர். இரவோடு இரவாக தமிழ்நாடு முழுக்க 560 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பு தெரிவித்து உள்ளது.
சென்னையில் ரவுடிகள் கைது : நள்ளிரவில் போலீசார் அதிரடி வேட்டை
தமிழ்நாட்டின் டிஜிபியாக பொறுப்பேற்றதில் இருந்து சைலேந்திரபாபு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தீவிரமாக திட்டங்களை வகுத்து வருகிறார்.
முன்பு திமுக ஆட்சியில் ரவுடியிசம் இருந்தது என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதேபோன்ற விமர்சனம் இந்த ஆட்சியில் வர கூடாது என்பதில் தமிழ்நாடு அரசும் தெளிவாக இருக்கிறது. இதனால் டிஜிபியாக பொறுப்பேற்றதில் இருந்து சைலேந்திரபாபு பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
குற்றம்
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில குற்றச்செயல்கள் நடைபெற்றன. நேற்று முதல்நாள் இரவு திண்டுக்கல்லில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் நடைபெற்றன. கடந்த வாரம் திருநெல்வேலியில் போலீசார் ஒருவரின் தம்பி ரவுடிகள் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதேபோல் தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சில கேங்க் மோதல்கள், பழிவாங்குவதற்காக செய்யப்பட்ட கொலைகள் அரங்கேறின.
ரவுடியிசம்
இப்படி தொடர்ச்சியாக வந்த செய்திகள் காரணமாகவே அரசு தரப்புக்கு கொஞ்சம் நெருக்கடியும் ஏற்பட்டது. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது ரவுடியிசத்தை மொத்தமாக ஒழிக்கும் வகையில் முக்கியமான ஆபரேஷனை நேற்று இரவோடு இரவாக தமிழ்நாடு போலீசார் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு, இன்று அதிகாலை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி உள்ளனர்.
சென்னை
சென்னை, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தேனி, கோவை என்று பல மாவட்டங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது. சென்னை புளியந்தோப்பில் உள்ள 50க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் இரவில் அதிரடி சோதனை செய்தனர். இதில் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் சில ரவுடிகள் சந்தேகத்தின் பெயரில் போலீசார் மூலம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பெயிலில் வந்தவர்கள், முன்பு குற்றச்செயலில் ஈடுபட்டு விடுதலையானவர்கள் என்று பலரின் வீடுகளில் போலீசார் ரெய்டு நடத்தி ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
டிஜிபி சைலேந்திரபாபு
துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையில் இந்த சோதனை சென்னையில் நடைபெற்றது. அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 36 ரவுடிகளை போலீசார் தட்டி தூக்கி உள்ளனர். ஒரே நாளில் இவர்கள் எல்லோரையும் மொத்தமாக அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். டிஜிபி சைலேந்திரபாபுவின் நேரடி உத்தரவின் பெயரில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களிலும் இரவோடு இரவாக ரெய்டு நடத்தப்பட்டு 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம்
எத்தனை மொத்தமாக ஒரே நாள் இரவில் ரவுடிகளுக்கு மாநிலம் முழுக்க செக் வைக்கப்பட்டுள்ளது. இரவோடு இரவாக தமிழ்நாடு முழுக்க 560 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பு தெரிவித்து உள்ளது. கைதானவர்களிடம் இருந்து 256 அரிவாள்கள், 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல குற்றச்செயல்களில் தேடப்பட்டு வந்தவர்கள், சந்தேக கேஸ்களாக இருந்தவர்கள், பெயிலில் வெளி வந்துவிட்டு வேறு ஊர்களுக்கு ஓடி சென்றவர்கள் என்று பலர் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு போலீஸ் மேற்கொண்ட ஆபரேஷன்களில் பெரிதான ஆபரேஷனாக இது பார்க்கப்படுகிறது.