சென்னை: சென்னையில் சில பகுதிகளில் 5.1 ரிக்டர் அளவுகோலில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதை தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை- ஆந்திராவை ஒட்டிய வங்கக் கடற்பகுதியில் இன்றைய தினம் நில அதிர்வு ஏற்பட்டது. வங்கக் கடலில் 10 கிமீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. சென்னையில் இருந்து கிழக்கே சுமார் 320 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் இது மையம் கொண்டிருந்தது.
இந்த அதிர்வானது ரிக்டர் அளவுக்கோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணாநகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம் ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் லேசான நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர். இதை தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையமும் உறுதிபடுத்தியது.
வங்கக் கடல்
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகையில் இன்றைய தினம் வங்கக் கடலில் 12.35 மணிக்கு ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ரஜோலு கிராமத்தின் தென் கிழக்கு பகுதியில் 227 கி.மீ. தொலைவிலும் சென்னையின் கிழக்கு- வடகிழக்கு பகுதியில் இருந்து 320 கி.மீ. தொலைவிலும் நில அதிர்வானது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
என்ன சேதம்
வெளிப்பகுதியில் இந்த நில அதிர்வு எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் நிலப்பகுதியில் சென்னை மற்றும் ஆந்திராவில் சேதம் ஏற்பட்டிருக்கும் என கருதப்படுகிறது. இந்த நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து மக்கள் பதற்றமடைந்தனர். பொதுவாக தமிழகத்தில் சென்னை, கோவை ஆகிய இடங்கள் நில நடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு உகந்த இடமாக சொல்லப்படுகிறது.
பெரும் சேதம்
கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமியாக மாறி பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்த வடுக்கள் இன்றும் மாறாமல் சோகமயமான நினைவுகளை கொடுத்து வருகிறது. சுனாமியால் நிறைய பேர் தங்கள் உடைமைகளையும் உறவுகளையும் இழந்த சம்பவங்கள் உண்டு.
கடலில் மூழ்கும் அச்சம்
இந்த நிலையில் தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு வங்கக் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால் மீண்டும் அடுத்தடுத்து ஏற்படும் அதிர்வுகள் எத்தகைய பாதிப்பை கொடுக்குமோ என்ற அச்சத்துடன் பொதுமக்கள் உள்ளனர். அது போல் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இந்தியாவின் 11 நகரங்களின் ஒரு பகுதி கடலில் மூழ்கும் என நாசா எச்சரித்துள்ள நிலையில் இது போன்ற நிலஅதிர்வு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.