சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டதால், உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறாமல் உள்ளன.
இந்த மாவட்டங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாரானது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மாவட்டம் வாரியாக தேர்தல் ஏற்பாடுகளை மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார் செய்து வருகிறார். ஒன்பது மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடிய பணியாளர்களுக்கு பயிற்சி, தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி போன்றவை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான தேர்தல் தேதி செப்டம்பர் 15ஆம்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. சட்டசபையில் வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையரை செய்ய வேண்டி இருந்ததால் தேர்தல் நடக்காமல் இருந்தது. தற்போது இவற்றிற்கு தேர்தல் விரைவில் நடத்தப்படும். ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட பின்னரே நாகப்பட்டினம் மாவட்டம் 2ஆக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டதால் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்திற்காக தனியாக தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதால் வார்டு வரையறை நடைபெறக்கூடிய சூழல் ஏற்பட்டது. மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 2019ஆம் ஆண்டில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. 100 சதவிகிதம் வெற்றிபெற வேண்டும் என்று இரு கட்சிகளும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளன. கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ள நிலையில் அக்டோபர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.