சென்னை: கடந்த 2 மாதங்களாக பரோலில் உள்ள ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக அவர் விழுப்புரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் கோரிக்கை விடுத்திருந்தார்.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று முதலில் 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த மே 28ஆம் தேதி, சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்தச் சூழலில் மருத்துவச் சிகிச்சையைத் தொடர்ந்து அளித்தால் தான் நல்லது என மருத்துவர்கள் கூறுவதால் பரோலை நீட்டிக்க வேண்டும் என அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி இரண்டு முறை பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாகப் பேரறிவாளன் விழுப்புரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளார். அவர் சிறுநீரக தொற்று பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேரறிவாளனுக்குக் கடந்த இரண்டு மாதங்களாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பரோல் காலம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.