சென்னை : 9 படங்கள் 9 உணர்வுகள் ஒரு பெருங்கொண்டாட்டம் என நவரசா வெளியாகி உள்ளது. மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா தயாரிப்பில் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் நவரசா எனும் அன்தாலஜி தொகுப்பில் “எதிரி ” என்ற படம் தான் முதலில் வரிசை படுத்தி இருக்கிறார்கள் நெட்பிளிக்ஸ் .
மீதி 8 படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வித்யாசமான கதைகளுடன் உலகெங்கும் இருக்கும் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்
மணிரத்தினம் எழுதிய இந்த கதையை பிஜாய் நம்பியார் எவ்வளவு மெனக்கெட்டு எடுக்க முடியுமோ அவ்வளவு தூரம் மெனக்கெட்டு ஒரு அற்புத படைப்பாக 30 நிமிடத்திற்குள் அழுத்தமான ஒரு கதையை சொல்லி உள்ளார் .
மனிதன் தெய்வம் ஆகலாம்
விஜய்சேதுபதி , பிரகாஷ் ராஜ் , ரேவதி , அசோக்செல்வன் என்று பலம் கொண்ட கூட்டணியுடன் ஒரு மெல்லிய உணர்வை ஆக்ரோஷத்துடன் பதிவு செய்கிறது எதிரி என்னும் இந்த கதை . மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் …என்கிற பழைய பாடலை ஆங்காங்கே பயன் படுத்திய விதம் மற்றும் வசனங்கள் அதிகம் இல்லாத பல இடங்களில் வெறும் பீஜிஎம் செய்யும் மாஜிக் மிக அழகு. பல ஹிந்தி மொழி படங்களை இயக்கிய பிஜாய் இந்த படத்தில் கொடுக்க பட்ட பட்ஜெட் வைத்து கொண்டு ஒரு நல்ல கதைக்கு மிக எதார்த்தமான நடிகர்கள் , லைவ்லியான லொகேஷன்ஸ் என்று மிகவும் அற்புதமாக ரசிக்க வைக்கிறார்.
நெகட்டிவ் ஷேடு
தீனா எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி ஒரு அற்புதமான நெகட்டிவ் ஷேடு கொண்ட ரோல் செய்து உள்ளார் . விஜய் சேதுபதிக்கு அல்வா சாப்பிடுவது போல் மிக எளிதான ஒரு விஷயம்தான், இருந்தாலும் அதை எவ்வளவு நேர்த்தியாக செய்யமுடியுமோ அவ்வளவு கச்சிதமாக செய்து கொடுத்து உள்ளார் .மனசில் ஏற்படும் வலி ,மனசாட்சி படுத்தும் பாடு, கோவத்தில் தடுமாறும் மனிதன் என்று எல்லா உணர்ச்சிகளையும் சிறப்பாக செய்து உள்ளார்.
உறவு முறிவு
கோபத்திற்கும் பாசத்திற்கும் ஒரு கொலை நடக்கிறது அது ஏன் நடக்கிறது ஏதற்காக நடக்கிறது, அதன் பின்னணி என்ன? என்பதுதான் எதிரி படத்தின் ஒன்லைன். பிரகாஷ்ராஜ் ரேவதி கதாபாத்திரங்களின் முதிர்ச்சியும் அனுபவத்தின் பயிற்சியும் மிக அழகாக இந்தப்படத்தில் காட்டுகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஒரு காம்பினேஷன் ஷாட் இருந்துருக்க கூடாதா என்பது பலரின் ஆசையாக இருக்கும். இருப்பினும் கதையின் அழுத்தம் அப்படி பட்ட திரைக்கதை என்று கணவன் மனைவி உறவு ,அதில் ஏற்பட்ட உறவு முறிவு என்று குற்றஉணர்ச்சியின் பல பாகங்களை பல கதாபாத்திரங்கள் இந்த படத்தில் சொல்லுகிறது .
கணவன் மனைவி
அசோக் செல்வன் தோன்றும் காட்சிகள் மிக மிக குறைவே ,இருந்தாலும் கொடுத்த அந்த வேலையை ரேவதியின் மகனாக “மா” மா என்று அம்மாவை வேதனையுடன் அழைத்துவிட்டு காணாமல் போகிறார் . நீண்ட நாள் நண்பர்கள் பேசாமல் இருப்பது , கணவன் மனைவி பேசாமலே இருப்பது , சகோதரர்கள் ,சகோதரிகள் பேசாமல் இருப்பது என்று அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்ட மௌனத்தின் உச்சம் அது நம்மை எங்கு கொண்டு செல்கிறது என்பதை சொல்வது தான் எதிரி படத்தின் அழமான கதை.
ஊதியமுமின்றி
தமிழ் சினிமாவின் பெருமை மிகு ஆளுமையான இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களின் அடிப்படையில் ஒன்பது பகுதிகளை கொண்ட ஆந்தாலஜி படத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்திய திரையுலகில் ஒரு அற்புதமான படைப்பை உருவாகியிருக்கும் இந்த முயற்சி , Netflix தளத்தில் ஆகஸ்ட் 6 இன்று உலகம் முழுதும் வெளியாகி உள்ளது . நவரசாவில் பங்கு கொண்ட தமிழ் சினிமாவின் முக்கிய கலைஞர்கள் பலர் , எந்த வித ஊதியமுமின்றி, நல்ல நோக்கத்தின் அடிப்படையில் பணியாற்றியுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு .
யார் யாருக்கு எதிரி
நவரசாவில் “எதிரி” படம் பார்த்த பல ரசிகர்கள் யார் யாருக்கு எதிரி என்ற கேள்விக்கு விடை கிடைத்தது என்று தான் சொல்லி வருகிறார்கள் .நம் மனதில் எழும் கோவம் மற்றும் ஈகோ தான் முதல் எதிரி என்பதை சொல்லாமல் சொல்லி வசனங்களை குறைத்து ஒரு குட்டி காவியமாக மணிரத்னம் எடுத்த இந்த முயற்சி இன்னும் நிறைய மனங்களை வெல்லும் என்று நம்புவோம் .பின்னணி இசை மற்றும் கேமரா ஆங்கில்ஸ்க்கு சிறப்பு பாராட்டுக்கள் . கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு நல்ல குட்டி கதை எதிரி .