சென்னை: நேற்றிரவு அமைச்சர் செந்தில்பாலாஜி மேற்கொண்ட அதிரடி ஆய்வினால் வடசென்னையே வெலவெலத்து போய்விட்டது..!
தமிழகத்தின் மின்துறை அமைச்சராக அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள், கருத்துகள், ஆய்வுகள், அதிரடிகள், அறிவிப்புகள் என மாறி மாறி வெளியாகி கொண்டிருக்கிறது..
குறிப்பாக, அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.. மேலும், கரண்ட் பில் அதிகமாக வருவதாகவும் ஆங்காங்கே சிலர் தெரிவித்து வருகின்றனர்..
கட்டமைப்புகள்
இதற்கு நடுவில் அணில் விவகாரத்தை அமைச்சர் பேசவும் அது மேலும் விவாதங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பி விட்டது. ஆனால், அதிமுக ஆட்சியின்போது, மின்சார கட்டமைப்புகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பதால்தான் கரண்ட் கட் ஆகிறது என்று பெருத்த விளக்கம் தந்திருந்தாலும், அவைகளை புனரமைக்கும் பணியில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார் அமைச்சர்..
அவலங்கள்
அதிமுக எப்போதெல்லாம் குறைகளை சொல்கிறதோ, அப்போதெல்லாம் கடந்த கால ஆட்சியின்போது நிகழ்ந்த மின்துறை அவலங்களை ஆதாரத்துடன், புள்ளிவிவரங்களுடன் எடுத்து பதிலடி தந்து வருகிறார்.. 4 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசும்போதுகூட, “கடந்த அதிமுக ஆட்சியில் குறைந்த மின் அழுத்த பிரச்சினை தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை… இதனால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் பாதிப்படைந்து குறைந்த மின் அழுத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது… இந்த பணிகள் 3 அல்லது 4 மாதங்களுக்குள் சரி செய்யப்படும்..
வாக்குறுதி
மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்கப்படும் என்கிற வாக்குறுதியும் விரைவில் நிறைவேற்றப்படும்… 3ல் ஒரு பங்கு மின்சாரத்தை நாம் கொள்முதல் செய்து வரும் நிலையில், நமக்கான உற்பத்தியை நாமே செய்து கொள்ள வேண்டும் என்கிற இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்… திமுக ஆட்சியில் மின் தடைகள் ஏற்படுவது போன்ற மாய தோற்றத்தை எதிர்க்கட்சிகள் செய்து வருகிறது..
மின்சாரம்
கடந்த ஆட்சியை விட தற்போது மின் தடை காலம் 1000 நிமிடங்கள் குறைந்துள்ளது… மின் தடை குறைக்கப்பட்டு சீரான மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்… மின்சார வாரியத்தின் சார்பில் 2006- 2010 திமுக ஆட்சியில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை விட அதிமுக ஆட்சியில் உற்பத்தியான மின்சாரம் குறைவு” ” என்று விளக்கம் தந்திருந்தார். இதுகுறித்து தன்னால் முடிந்த அளவு ட்விட்டரில் நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்து வருகிறார்.. எந்நேரமும் ஆய்வுகளில் இறங்கி பிரச்சனைகளை சரி செய்து வருகிறார்.. மின்சார துறையை அதிமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டியும் வருகிறது..
சென்னை
இந்நிலையில், நேற்று நள்ளிரவு செந்தில் பாலாஜி சென்னையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்… அந்த நேரத்தில் அமைச்சர் வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. அமைச்சரின் வருகையை எதிர்பாராத அலுவலர்கள் மிகுந்த ஷாக் ஆனார்கள்.. பிறகு கன்ட்ரோல் ரூமுக்குள் நுழைந்தார் அமைச்சர்.. அங்கு நடக்கும் பணிகளை பார்வையிட்டார்.. ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, பொதுமக்கள் ஒருவரிடமிருந்து போன் வந்தது..
போன்
அந்த போனை உடனடியாக அமைச்சரே எடுத்து பேசினார்.. அந்த புகார் என்ன என்பது குறித்து கேட்டறிந்து, அதுசம்பந்தமான நடவடிக்கையை எடுக்கும்படி அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதனால் மின்சார வாரிய தலைமை அலுவலகம் நடுராத்திரி பரபரப்பாக காணப்பட்டது… அதன்பிறகு, திடீரென அங்கிருந்து வடசென்னையில் கொருக்குப்பேட்டைக்கு சென்றார் அமைச்சர்.. அங்கு துணைமின் அலுவலகத்தை பார்வையிட்டார்… அவர்களும் அமைச்சரின் வருகையை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..
சஸ்பெண்ட்
ஆய்வின் போது, டியூட்டியில் இருந்த ஜெகன் என்ற ஊழியர் மது அருந்தியிருந்தார். இதை அறிந்த அமைச்சர், அங்கேயே அப்போதே ஜெகனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார். இதை பார்த்ததுமே அங்கிருந்த மேலும் சிலருக்கு கலக்கம் வந்துவிட்டது. பிறகு சிறிது நேரம் அங்கேயே இருந்து பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகள் முறையாக கையாளப்படுகிறது என்பதையும் கண்காணித்தார்.
நடவடிக்கை
அவராகவே தொலைபேசி அழைப்புகளை எடுத்து பொது மக்களிடம் புகார்களை பெற்றதுடன், உடனே அவைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் வட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு ஆய்வு மேற்கொண்ட அவர், தண்டையார்பேட்டை, எம்கேபி நகர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மின் இணைப்புகளை சரி செய்யும் பணிகளை ஆய்வு செய்தார்…
அமைச்சர்
அப்போது அமைச்சர் வந்திருப்பதை அறிந்த பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து, தங்கள் பகுதியில் கரண்ட் கட் அடிக்கடி ஏற்படுவதாக புகார் சொன்னார்கள்.. அனைத்து பிரச்சினைகளும் உடனே சரிசெய்யப்படும் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் உறுதி அளித்தார்… இதனால் நேற்று நள்ளிரவெல்லாம் வடசென்னை பரபரப்பாகவே காணப்பட்டது.