Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள் அமைக்கப்படும்- அமைச்சர் சேகர் பாபு

sekarbabu1-1620732638-1625402590-1628073498

சென்னை: கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள் அமைக்கப்படும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு.

முக ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவியேற்றதும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் சேகர் பாபு. பதவிக்கு வந்தது முதல் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோவில்கள் தனியார் அதாவது பக்தர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது வலதுசாரிகள் பலரின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இதை அரசு ஏற்கவில்லை.

விமர்சனங்களை போக்க நடவடிக்கை

அதேநேரம், கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என்று எதை வைத்து விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறதோ, அந்த விமர்சனங்களை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை அமைச்சர் சேகர்பாபு எடுத்து வருகிறார். அதில் முக்கியமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின், சொத்து ஆவண விவரங்கள் இணையதளத்தில் வெளியிட்டது ஒன்றாகும். இதற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தன.

அதிரடி நடவடிக்கைகள்

மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பிடமிருந்து மீட்பது, கோவில் வாடகை வருமானத்தை அதிகரிப்பது, காணாமல் போன சிலைகளை மீட்டு கொண்டு வருவது என்று பல அதிரடி நடவடிக்கைகளை புதிய அரசு மேற்கொண்டு வருகிறது.

சேகர் பாபு பேட்டி

இந்த நிலையில்தான், சென்னை எழும்பூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் மிக விரைவில் நிறைய கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது. கோயில் சிலைகளை கடத்தும் நபர்களை கண்டுபிடித்து கைது செய்து வருகிறோம். . திருடப்பட்ட கோவில் சிலைகளை வீட்டில் கொண்டுபோய் வைத்து பூஜை பாய்கின்றனர். அதை கண்டுபிடித்து, வீட்டில் உள்ள கோயில் சாமி சிலைகளை எல்லாம் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கோவில் வருமானம்

கோயில் நிலங்களை பிற பணிகளுக்கு அளித்து, அதில் வரும் வருமானம் கோயில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும். கோயில் நிலங்களில் எளிய மக்களின் வீடுகள் இருக்கும்பட்சத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டால் அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கவோ அல்லது கோயில் இடங்களிலே புதிய குத்தகை முறையில் இடம் வழங்கவும் தயார். சிதம்பரம் நடராஜர் கோயிலை மீட்க சட்ட போராட்டம் நடத்தி முதல்வர் தேவையான நடவடிக்கை எடுப்பார். சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இவ்வாறு சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

புதிய யோசனை

கோவில் நிலங்களில் கல்வி நிலையங்கள் அமைப்பதன் மூலமாக நிறைய வருமானம் கிடைக்கும், அது கோவில் மற்றும் பக்தர்கள் நலனுக்காக செலவிடப்படும் என்பதே தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சகத்தின் திட்டமாக இருக்கிறது. புதிதாக ஒரு யோசனையை அமைச்சர் முன் வைத்துள்ள நிலையில், இதற்கு இப்படியான பின்னூட்டங்கள் வரும் என்பதை வரும் நாட்களில் தான் பார்க்க வேண்டும்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp