Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

இந்தியாவில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு- 24 மணிநேரத்தில் 42,625 பேருக்கு பாதிப்பு – 562 பேர் மரணம்

covid-live1-1628055589

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று காலை வரையில் கடந்த 24 மணிநேரத்தில் 42,625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 562 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் பாதிப்பு சற்று குறைந்திருந்தது. ஆனால் நேற்று திடீரென முந்தைய நாள் பாதிப்பைவிட 40% அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 18,47,518 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 42, 625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 47,31,42,307 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திடீர் அதிகரிப்பு

நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30, 549 ஆக இருந்தது. ஒரே நாளில் சுமார் 12,000 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,17,69,132 ஆக அதிகரித்துள்ளது.

562 பேர் கொரோனாவால் உயிரிழப்ப்பு

அத்துடன் ஒரே நாளில் 562 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர். நாட்டில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 4,25,757. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,10,353 ஆக உள்ளது. உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் குறைவுதான். இந்தியாவின் மொத்த பாதிப்பில் ஆக்டிவ்ஸ் கேஸ்கள் எண்ணிக்கை 1.29%. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் மொத்தம் 36,668 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைதல் 97.37% ஆக உள்ளது. கொரோனா 2-வது அலையில் படிப்படியாக பாதிப்பு குறைந்த நிலையில் திடீரென முதல் முறையாக தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

கேரளாவில் அதிகரிப்பு

ஜூலை 22-ந் தேதி வரையிலான வாரத்தில் சராசரியாக 37,975க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 3-ந் தேதி வரையிலான வாரத்தில் 40,710 என்ற எண்ணிக்கையில் இருந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கேரளாவில் நேற்று 23,676 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. நாட்டிலேயே கேரளா மாநிலத்தில்தான் மிக அதிகமான தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. கேரளாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34.49 லட்சம். கேரளாவில் நேற்று கொரோனாவுக்கு 148 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அம்மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 17,103 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் நேற்று 1,908 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. முந்தைய நாளை ஒப்பிடுகையில் இது 2% குறைவு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 29 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழகத்தின் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

பிற மாநிலங்களில்..

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,674 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் 38 பேர் கொரோனாவால் இம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் நேற்று 6005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் ஒருவாரத்தில் கொரோனா பாதிப்பு 76% என அதிகரித்துள்ளது.

44 மாவட்டங்களில் கடும் பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் 62.53 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. உ.பி.யில் நேற்று மட்டும் 26,03,631 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் 8 மாநிலங்களில் 44 மாவட்டங்களில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு வீரியமாக உள்ளதாக மத்திய அரசு எச்சரித்திருக்கிறது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp