சென்னை: தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை தந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை வரவேற்றனர்.
நாடு விடுதலை அடைவதற்கு முன்னதாக மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் கீழ் 1920-ம் ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. அப்போது அரசியல் அதிகாரங்கள் கோரி காங்கிரஸ் கட்சி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தி வந்தது. அதனால் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில்
சென்னை மாகாண பொதுத்தேர்தலில் நீதிக்கட்சி 98 இடங்களில் போட்டியிட்டு 63 இடங்களில் வென்றது. நீதிக்கட்சியின் சுப்பராயலு ரெட்டியார் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வரானார். இதனடிப்படையில் 1921-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபை உருவாக்கப்பட்டது. இதனடிப்படையில் சட்டசபை நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடுகிறது.
நூற்றாண்டு விவாதம்
சட்டசபை நூற்றாண்டு விழா தொடர்பாக பல்வேறு கருத்துகளும் விவாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. நாடு விடுதலை அடைந்த பிறகு 1952-ல் நடத்தப்பட்ட முதல் பொதுத்தேர்தலில் இருந்துதான் சட்டசபையின் காலத்தை வரையறுக்க வேன்டும். அப்படியானால் சட்டசபைக்கு வயது 69தான் என ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இதனைப்பற்றி கவலைப்படாமல் சட்டசபை நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் கனஜோராக செய்யப்பட்டு வருகின்றன.
கருணாநிதி படம் திறப்பு
இந்த சட்டசபை நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்பட உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் உருவப்படத்தை இன்று திறந்து வைக்க உள்ளார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பலத்த பாதுகாப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி சென்னையில் சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி இருந்தனர்.
ஊட்டியில் தங்குகிறார்
கருணாநிதி உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் மீண்டும் கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று இரவு தங்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை காலை விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி செல்கிறார். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தை வந்தடையும் அவர் ஆளுநர் மாளிகை சென்று தங்குகிறார்.
ஊட்டி நிகழ்ச்சிகள்
குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி ராணுவ அதிகாரிகளுடன் ஆகஸ்ட் 4-ந் தேதி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். ஊட்டியில் உள்ள சுற்றுலாதலங்களை ஆகஸ்ட் 5-ந் தேதி அவர் பார்வையிடுவதுடன் பழங்குடி மக்கள் கிராமங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். ஊட்டி ஆளுநர் மாளிகையில் ஆகஸ்ட் 6-ந் தேதி வரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தங்குகிறார்.
450 பேருக்கு பரிசோதனை
ஏற்கனவே ஊட்டி ஆளுநர் மாளிகை ஊழியர்கள் மொத்தம் 450 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. ஊட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ஊட்டி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1200 போலீசார் ஜனாதிபதியின் பாதுகாப்பு பணிக்காக நீலகிரி மாவட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மாநில போலீசாரும் நீலகிரியில் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்படுகின்றனர்.